Ntmani’s Weblog

ஜூலை 20, 2004

உண்மைகள் கூறி….

Filed under: பொதுவானவை — ntmani @ 11:26 பிப

இந்த விபத்து மிக கொடியது; அதற்கான சகல எதிர்வினைகளும் அதை இன்னும் கொடியதாக்குகின்றன. மக்கள் இதை கொடுமையான விபத்தெனப் பார்க்கின்றனர்; விதியென இதை எதிர்கொண்டு தம்மை ஆற்றிக்கொள்கின்றனர். அரசியல்வாதிகள் தம்மால் இயன்ற அனுதாபத்தையும், உதவியையும் செய்கின்றனர். சில தனிநபர்கள், அமைப்புகள் உதவிபுரிகின்றனர். இவ்வளவுதானா? கிட்டத்தட்ட 90 குழந்தைகளின் கொடுமையான இறப்பு கோருவது இதைத்தானா? இதற்குமுன் திருச்சி கல்யாண மண்டப விபத்து, கும்பகோண மகாமக விபத்து, வாராங்கல் ரயில் விபத்து இப்படி பல விபத்துக்களின் போதும் நாம் இதையேதான் செய்தோம், நினைவிருக்கிறதா?

நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட 300 ரயில்வே பாலங்கள் எந்த நேரத்திலும் விழுகின்ற நிலையில் இருப்பதாய் விசாரனைக் கமிசன் உறுதியாய் சொன்ன போதிலும் அவற்றை சீர் செய்யாமல் எந்நேரமும் வெடிக்கும் ஒரு வெடிகுண்டைப்போல இருக்க அனுமதிக்கும் அரசுகளை என்ன சொல்வது? இவர்கள் எந்தவிதத்தில் தீவிரவாதிகளை விட மாறுபட்டவர்கள்? இவர்கள் இன்னொரு விபத்து நடக்கும் போது தவறாமல் ஓடிவந்து கண்ணீர் உகுப்பார்கள்; பத்திரிக்கைகள் படம் காண்பிக்கும், அறிஞர்கள் காசு திரட்டி தண்ணீர்ப் பந்தல் வைக்கலாமா? கூரைக் கொட்டகை மாற்றலாமா? என்று விவாதிப்பார்கள். கூரைப்பள்ளிகள், வீடுகள் இந்தியாவில் புதியவையல்ல; தீ விபத்தும் புதியதல்ல. அவைகளில் கண்டிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பள்ளியென்ற பெயரில் மூன்றாம் மாடி (மொட்டைமாடியில்) தப்பிக்கவும் , காப்பாற்றவும் வழியில்லாமல் ஒரு இருட்டறைக்குள் பள்ளி நடத்திட முடியும் என்று நினைக்கிற அராஜகம் கண்டிக்கத்தக்கது; பள்ளியென்றால், யூனிபார்ம், போட்டு டை கட்டி, மம்மி டாடி சொல்லிக்கொடுத்து ரிக்சாவில் அழைத்துப்போய் கொண்டுவரும் அமைப்பென்று புரிந்துகொள்கிற மக்களின் மூடத்தனம் கண்டிக்கத்தக்கது. கல்வியென்றால் முட்டி மோதி ஒடி, காசு கொடுத்து, கைகால் பிடித்து, எப்படியாவது காசு சம்பாதிக்கவும், அதை காட்சிப்பொருளாக்கி கெளரவம் தேடவுமான வழி என்று புரிந்துகொண்டிருக்கிற சமூக விழுமியம் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் என்றால் அடிமைகள் என்றும், கல்வியென்பதை இன்னும் அதிகார வசதி என்று புரிந்துகொண்டிருக்கிற கல்விநிறுவன மனப்பான்மை கண்டிக்கத்த்க்கது. மக்கள் தமது ஆளுதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், அனுதாபத்துக்கும், தாம் வீசியெறிகிற இலவசங்களுக்குமான பாத்திரங்கள் என்று கருதுகிற, இப்படி செய்வதையே ஆட்சி புரிவது என்று நம்புகிற அரசியல்வாதிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கண்டிக்கத்த்க்கவர்கள், சபிக்கத்தக்கவர்கள் ஒருசாரார். அவர்களாலேயே இத்தனை சீரழிவுகளும், ஊழல்களும், அராஜகங்களும், மூடத்தனங்களும் நிலவுகின்றன. ‘உலகு என்பது பெரியோர் மாட்டே’ என்று படித்திருக்கிறேன். இப்படிப்பட்ட எந்த விழுமியங்களையும், கற்பிதங்களையும், ஒழுக்கங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் சிறிதும் உடைக்காமலும், அவற்றின் அரிதாரத்தை கலைக்காமலும், அவற்றின் அநாகரீகங்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு அவர்களது உண்மையான இடத்தை, கல்வியை, உரிமையை, பொறுப்பை சொல்லாமலும், வெளிப்படுத்தாமலும் இருக்கிற அறிஞர்கள், சான்றோர்கள், கற்றோர்கள் இவர்கள்தான் இந்த பெருங்கண்டனத்துக்கு உரியவர்கள்.

விடுதலை என்பது எவருடைய கருணையிலும் வாழ்வதல்ல; எவருடைய அனுதாபத்திலும் உழல்வதல்ல. விடுதலை என்பதன் விளக்கமாக நான் நினைப்பது ஒருவர் தம்மைப்பற்றிய சரியான புரிதலைப் பெறும்போது கண்டுகொள்கிற பிறப்புரிமை என்பதுதான். அது அரசியல் விடுதலையாகட்டும், பொருளாதார விடுதலையாகட்டும், ஆன்மீ
விடுதலையாகட்டும் விடுதலைக்கான் விளக்கம் அது என்றுதான் நான் கருதுகிறேன். எனவே விடுதலை என்பது எல்லாருக்குமானது; அல்லது அதை எல்லோருக்குமானதாக ஆக்க அறிஞர்கள் உழைக்க வேண்டும். பாரதி அதன் பொருட்டே பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை… என்றான். இந்த விடுதலைக்கான வழியாக தேசியக்கல்வியொன்றே வழியெனச் சொன்னான். வெறும் ஆங்கிலேயே ஆதிக்க எதிர்ப்பாக அவனது விடுதலைக்குரலை விளங்கிக் கொண்டோம். வெள்ளையரசில் இருந்து பெறும் விடுதலை வெறும் ஆதிக்கமாற்றம் மட்டுமே என்பதைக் கூட அறியாதவனா அவன்? ஆனால் அப்படி அவனைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் மூடர்களாய் இருந்தோம். எனவே நமது அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் என்று சொல்லிக்கொள்கிற எதுவும் மக்களை விடுவிக்கிற வகையாய் இல்லை. ஏனெனில் அந்தப் பொறுப்புகளில் இருப்பவர்கள், அதற்கு அருகதையாக தம்மைச் சொல்லிக்கொள்கிறவர்கள் விடுதலை அடைந்தவர்களாய் இல்லை. சான்றோர்கள் அற்ற நாடாய்ப் போய்விட்டது இது. மக்களையோ, தம்மையோ கருத்தில் கொள்ளாமல் ஒரு நாளைக்கு முந்நூறு பக்கங்கள எழுதுவதால் தம்மை எழுத்தாளர்களாய் சொல்லிக்கொள்ளும் படைப்பாளிகள், ஹாலிவுட் சினிமா அத்தனையையும் அப்படியே சுட்டு தமிழில் (?) தந்து தன்னை அதிமேதாவிகளாய்க் காட்டிக்கொள்ளும் இயக்குனர் இரத்தினங்கள், சாதிமுதல் சகலவிதமான அழுக்குகளையும் பாதுகாக்கும் சங்கரமடங்கள், ஜனநாயகம், புரட்சி என்று காட்டி காசு பொறுக்கும் அரசியல்வாதிகள், வெறும் அடியாட்களாயும், அடிமைகளாயும் குறுகிப்போன கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், இவர்களத்தனை பேரையும் படங்காட்டி ஊரை ஏமாற்றும் ஊடகங்கள். இவர்களில் எவருடைய இடத்தையாவது எப்படியாவது தமது பிள்ளை எட்டிப்பிடித்துவிடாதா என ஏங்கும் மத்தியதர வர்க்கம். அதற்காக எப்படியாவது ஒரு பள்ளி, ஏதாவது ஒரு பாடம்.  இவர்களிடமிருந்து உதிரும் கருணையையும், இலவசங்களையும் எட்டிப்பிடிக்கவென்றே நாம் கட்டிக் காப்பாற்றி வரும் அடித்தட்டு மக்கள். இந்த மதிப்பீடுகள் எதையும் கேள்வி கேட்காத, இவை உறையும் பீடங்களை உடைக்காமல், இவற்றை வழிபடும் பெரியோர்கள்….

இதோ இன்னொரு விபத்து, இன்னொரு கருணை வெள்ளம், கண்ணீர்க் காட்சிகள், அனுதாப ஓலங்கள், ஒலைகொட்டகை முதல், அடுப்பு நெருப்புவரை குற்றம் சொல்லி திசை திருப்பும் விவாதங்கள்… இதற்கு நடுவிலோ, இவை ஓய்ந்தபின்னோ உண்மையான கரிசனையோடு முன்னொக்கோடு மக்களுக்கு அவர்களின் மதிப்பீடுகளில் ஏற்பட்டிருக்கிற நாசத்தை, அவர்களது உரிமையில் ஏற்ப்பட்டிருக்கிற ஊனத்தை சொல்லுவார்கள் என்று இதுகாறும் எதிர்பார்த்தேன்.
 
* * *
சில நாட்களுக்கு முன் நானும் எனது ஜெர்மானிய நண்பரும் அடுத்த மாதம் வரப்போகும் அவருடைய விருந்தினருக்கு ஒரு அறை பதிவு செய்யச் சென்றிருந்தோம். இதைச் செய்ய ஏகப்பட்ட கடிதங்கள், நடுவில் இதைக் கவனித்துக் கொள்ளும் அலுவலரின் விடுப்புகள். கடிதத்தை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பங்கள் (இதை வழமையாக செய்து வரும் அலுவலகம் தான் அது) சம்பந்தமில்லாமல் நண்பருக்கே அவருக்கு புரியாத மொழியில் திட்டு, இதையெல்லாம் கண்டு ஜெர்மன் நன்பருக்கு வியப்பு. இத்தனைக்கும் பிறகு கடைசியில் விருந்தினர் அறையை பதிவு செய்யும் அலுவலர் ஒருவருக்கு 5 நாள்தான் அறை ஒதுக்க முடியும் என்றார். ஆனால் பின் அவரே நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லிவிட்டார். நண்பர் என்னிடம் கேட்டார், “ஏன் ஒருவர் தமது விருந்தினரைத் தங்க வைக்கவென தீர்மானமான ஒழுங்கு படுத்தபட்ட வழிமுறைகள், விதிகள், வசதிகள் இல்லையா? என்னிடம் யாரும் அப்படிப்பட்ட எந்த விதிகளையும் சொல்லவோ, எனக்கு என்னென்ன உரிமைகள் பொறுப்புகள
் இருக்கின்றன என்று சொல்லவோ இல்லையே என்றார்”. நான் அவரிடம் சொன்னேன். இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டிலேலேயே ஓரே விதிதான் இருக்கிறது. அது மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளையும், பொறுப்புகளையும் சொல்லாதவரை, அவர்களை எப்போதும், குழப்பத்திலும், சார்ந்திருப்பதிலும் வைத்திருக்கும் வரை நீ அவர்களை அதிகாரம் செய்யலாம், குற்ற உணர்வில் வைக்கலாம், கருணை காட்டலாம், காசு சம்பாதிக்கலாம் என்ற விதிதான் அது. இந்த நாட்டை சட்டம் ஆளுகிறது என்று சொல்வதை விட இந்த ஒரு விதியே ஆளுகிறது என்று சொல்லலாம் என்றேன்.

உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் – இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.

***
அருளுடைய பதிவுக்கும், சுந்தருடைய பதிவுக்குமான எனது பின்னூட்டங்கள்.

ஜூலை 16, 2004

இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?

Filed under: பொதுவானவை — ntmani @ 12:26 பிப

தீ
தின்றுவிட்டது
சிலேட்டுகளை
பால் குச்சிகளை
நெஞ்சோடு சேர்த்தணைத்து
நாக்கு துருத்தி எழுதும்
இளந்தளிர்க் கரங்களை.
 
இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?
கூரையிலிருந்தா?
அடுப்பில் இருந்தா?
நமது பேராசைகளில் இருந்தா?
அலட்சியத்தில் இருந்தா?
பொய்களில் இருந்தா?
 
இந்த நெருப்பு எங்கிருந்து கிளம்பியது?
 
தயவுசெய்து இம்முறையும் இதை
கண்ணீரால் அணைக்கப்பார்க்காதீர்கள்.
 
 
 
 
 
 

துணைக்கண்ட வரலாறு – தீராத வியப்பு

Filed under: பொதுவானவை — ntmani @ 4:39 முப

இந்தியாவின் வரலாறு என்பது எப்போதும் சிந்து சமவெளி நாகரீகம், ஆரியர் வருகை, ஆரிய திராவிட கலப்பு இப்படியே எழுதப்பட்டும், கற்பிக்கப் பட்டும், கருதப்பட்டும் வருகிறது. எனக்கு சிறுவயது முதலே ஆச்சர்யமான ஒரு விசயமாக இது இருந்துவந்தது. சிந்து சமவெளி நகர நாகரீகம் இருந்த காலத்தில் துணைக்கண்டத்தின் தெற்கிலே மக்கள் எவரும் வசித்தனரா இல்லை இவையெல்லாம் மக்களற்ற பிரதேசங்களா அப்போது என்று. பிறகும் வரலாற்று பார்வை (அது ரொமீலா தாப்பர் எழுதியதாயிருந்தாலும்) வடக்கில் இருந்தே இறங்கிவரும். இப்படி வரலாறு வடக்கில் இருந்து இறங்கி வரும்போது (வட இந்திய சரித்திரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது) திடீரென இதே சமயத்தில் தென்பகுதியில் முற்கால சோழ, பாண்டிய அரசுகள் இருந்தன என்ற சிறு குறிப்பை அபஸ்வரம்போல எழுதிச் செல்லும் வரலாற்றாசிரியரின் கரம். அப்போதும் நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன், இதெப்படி திடீரென தமிழரசுகளைப்பற்றிய குறிப்புடன் தமிழக வரலாறு ஆரம்பமாகிறதே என. இது ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம் என்பதைவிட மோசமான கதையாகவல்லவா இருக்கிறது என்று தோன்றும்.

ஆனால் இதற்கு மாறாக வடமொழிக் குடும்பத்தோடு சற்றும் ஒட்டாமல் ஒரு மொழி தனித்தியங்கியும், வளர்ந்தும், செழித்தும் இருக்கிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆனால் ஒரு எளிய உண்மையை சொல்லிக்கொண்டேயிருக்கிறது. அதாவது இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகுதியில் ஒரு மக்களினம் மிக வலிமையாக, புவியியல் ரீதியாக தன்னை நிலைப்படுத்தி, தனது மொழியில் தேர்ந்த இலக்கிய இலக்கணங்களை, பிறமொழியின் (அல்லது சமஸ்கிருதத்தின்) துணையின்றி பெறுமளவுக்கு அமைதியான ஒரு வாழ்வை நீண்ட காலத்திற்கு வாழ்ந்திருகிறது. அப்போதுதான் தமிழ் போன்ற ஒரு மொழி அதன் இத்தனை வளங்களுடன் பயின்று வந்திருக்கமுடியும். இது ஒரு எளிய ஊகமேயாயினும், புறந்தள்ளமுடியாதது; புறந்தள்ள காரணமுமற்றது. ஆனால் நமது வரலாற்றாசிரியர்கள் இதை இடக்கையால் புறந்தள்ளியிருப்பார்கள் போல. இந்தியாவென்றால் அது வட இந்தியாவாகவும், மொழியென்றால் அது சமஸ்கிருதம் என்றாகவுமே சொல்லப்பட்டுவருகிறது. இப்போது சமஸ்கிருதத்தின் இடத்தில் இந்தி. மற்றபடி மனப்பான்மையில் மாற்றமில்லை. கனடாவின் க்யூபெக் மாநில பலகலைக்கழக கடிதங்கள், அரசு விளம்பரங்கள், இணையத்தளங்கள் இவற்றில் பிரஞ்சுமொழியை (மட்டுமே) பார்க்க நேர்ந்தபோது எனக்கு அதுவும் கனடாதானே என்று வியப்பாயிருந்தது. ஆனால் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை என்று கதைப்பதில்லை என்று தெரிந்தபோது இன்னும் வியப்பாயிருந்தது.

இன்றைய இண்டியன் எக்ஸ்பிரஸில் துணைக்கண்ட வரலாறு என்பது வட இந்திய வரலாறல்ல என்ற செய்திக்கட்டுரையைப் பார்த்தபோது மறுபடியும் இது நினைவுக்கு வந்துது. இப்படியும் கேள்வியெழுப்பக்கூட ஆட்கள் இருக்கிறார்களா என்று வியப்பின் உச்சிக்கே போய்விட்டேன். 89 பக்கங்களில் 9 பக்கங்கள் கூட தென்னிந்திய (தமிழ்நாட்டை விட்டுத்தள்ளுங்கள்) வரலாறு இல்லையாம்.

ஜூலை 6, 2004

சில பின்னூட்டங்கள்

Filed under: பொதுவானவை — ntmani @ 9:50 பிப

இன்றைக்கு சில பதிவுகளைப் படித்து சில பின்னுட்டங்களை எழுதினேன். அவைகள் இங்கும் இருக்கின்றன.

சுந்தரின் பொங்கும் பால்டிமோர்-1 படித்துவிட்டு:

காட்சிப்படுத்துவதில் விதுரனின் விவரிப்பு போல இருக்கிறது உனது எழுத்து. மிகவும் நன்று. பொங்கும் பால்டிமோர்! தலைப்பும் அருமை. நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி, நமது கடவுள் சாதி காப்பற்றும் கடவுள், நமது மதம் சாதி காப்பாற்றும் மதம் என்றார் பெரியார். மொழியும் இலக்கியங்களும் கட்டுடைக்கப் படவேண்டும்; சில ஆன்மீக பார்வையிலும், சில சமூகப் பார்வையிலும் மீள்பார்வைக்கும் மறு புரிதலுக்கும் முன் வைக்கப்படவேண்டும். இவ்விரண்டு பார்வைக்கும் சகல தளைகளில் இருந்தும் விடுபடும் விடுதலையே அடிப்படையாக இருக்கவேண்டும். நான் இச்சமூகத்தின் மேல் ஒரு வெடிகுண்டைப்போல விழுந்து வெடிப்பேன் என விவேகானந்தர் சொன்னார். ஆனால் அதைப் பெரியார்தான் செய்தார். நல்லது. //அப்படியே நாங்கள் எல்லாரும் எங்க ஊருக்குச் சீக்கிரமா போறத்துக்கு எதாச்சும் வழி செய்யச் சொல்லுங்க// இப்படித்தான் இந்து, தினமலர் நிருபர்களிடமும் மக்கள் எல்லாக்கூட்டங்களிலிம் கேட்டிருப்பார்கள். அவர்களது அறியாமை என் கண்களை நீரால் நிறைக்கிறது. உனது அடுத்த பதிவின் மூலம் பார்க்க தயாராகிவிட்டேன். நன்றி.

அருணின் திரைப்படம் எடுப்பவர்கள் கவனத்திற்கு…. பின்:

இப்படி கலைக்கு கடிவாளம் போட பலபேர் கிளம்பிவிட்டார்கள் என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன். அதுவும் மதத்தின் பேரிலும், பண்பாட்டின் பேரிலும். அது கருத்துரிமைக்கும், பன்மைத்தன்மைக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதும் உண்மை. ஆனால் உங்கள் உதாரணங்களுடன் முரண்படுகிறேன். முதலில் இராமன் எல்லோருக்கும் கடவுள் அல்ல. ஒரு இதிகாச பாத்திரம். இந்த நாட்டில் இராமயண வடிவங்களின் எண்ணிக்கை (பல்வேறு வகைப்பட்ட சித்தரிப்புகளுடன்) தொல்குடிகளின் எண்ணிக்கையை நெருங்கும். அவைகாட்டும் இராமனும், சீதையும் பலத்திறப்பட்டவர்கள். இவ்வாறு ஒவ்வொரு கலைஞனும் இந்த கதையை தமது கலையுணர்வு, பண்பாட்டு அடித்தளம் இவற்றின் மூலம் வெவ்வேறு வகைகளில் அணுகியதே இது (இராமயணம்) ஒரு கற்பனை என்பதற்கும் அதே சமயத்தில் தமது படைப்பை இதில் இருந்து உருவாக்கும் பொழுதே இது மேலும் மேலும் நுட்பமாக புனையப்பட்ட சட்டகமாக (template) மாறிவருவதும் புரிந்து கொள்ளக்கூடியது. இவ்வகையிலேயே நமது இரு பெரும் இதிகாசங்களும் இருக்கின்றன. ஆனால் பெரியாரும் இராஜாஜியும் வரலாற்று பாத்திரங்கள், அதுவும் நம்பிகைக்கு தேவையற்ற விதத்தில் மிகத்தெளிவான செய்திகளுடன் கூடியவர்கள். (பெரியார் இராஜாஜியாவதாக எழுதுவது ஒரு திரிபு வாதம்) இவ்வாறு எழுதுவது இந்த இருவரையும் பற்றி தெரியாதவர்களுக்கு தவறான கருத்தை விற்பதாகும். வரலாற்றைத் திரிப்பது, பொய்யான தகவல்களை தமது சுயநலனுக்காக விற்பது இவை வேறு கலைஞனின் சுதந்திரம் வேறு இல்லையா?

பிறகு எஸ்.ராமகிருஷ்ணனின் நூலகலட்சணம் படித்துவிட்டு…

புத்தகமெழுதுவோரின் (நாம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று சொல்லுவோரின்) நிலையே கேவலமாய் இருக்கையில் நூலக அமைப்பில் இருக்கும் குற்றங்களை மட்டும் எப்படிச் சொல்வது. பெண்மொழி பற்றிய சமீபத்திய சர்ச்சையின் போது `அவர்கள் அழைப்பது போல இருக்கிறது’ என்றார் கவிஞர் அப்துல் ரஹ்மான். இன்னும் பல முன்னனிக் கவிஞர்கள் எட்டிக்குதித்தனர். காவிரிப் பிரச்சனையிலோ, ஈழப்பிரச்சனையிலோ, குஜராத் கொடுமைகளைப் பற்றியோ இவர்கள் சொன்னது என்ன? இப்படி மக்களிடமிருந்து மக்கள் பிரச்சனைகளில் இரு
்து முற்றிலுமாக விலகி இருப்பவர்களை விட சமையல், வாஸ்து பற்றி எழுதுபவர்கள் மக்களிடம் நெருங்கி இருக்கிறார்கள் (அதை புத்தக விற்பனையும் உறுதிப்படுத்துகிறது). ஆனால் இவர்கள், மக்களிடமிருந்து தமது புத்தகங்களுக்கு மரியாதையையும், காசையும், தமது இறப்பிற்கு போதுமான கவனத்தையும் கோருகிறார்கள். ஆனால் இந்த நிலைமை தமிழ் நாட்டில்தான் என்று நினைக்கிறேன். இதற்கு ஒரு காரணம் வெகுஜன இலக்கியமுயற்சிகளை, கலைகளை, பண்பாட்டுகூறுகளை, ஒரு தீட்டுபோல ஒதுக்கிவிட்டு (அவைகளில் குறையிருக்கலாம், ஆனால் மதிப்பெண் குறைவாய் எடுத்ததற்காக மகனை மாற்றிக்கொள்ள முடியுமா?) மக்களுக்கு அன்னியமான தமது மூளைகளை மட்டும் (அதுவும் இறக்குமதி) கலை என்ற நமது கலைஞர்களே. இவர்கள் இதனால் மக்களிடம் தமது செல்வாக்கை, மதிப்பை, உண்மையான அறிமுகத்தை (மக்கள் நமது கவிஞன் இவன் என்று சொல்லவேண்டுமைய்யா!) இழந்து நிற்கிறார்கள். பின்னர் ஒரு அரசு அமைப்பிடம் (அதுவும் மக்களாலேயே ஆனது) வேறு என்ன எதிர்பார்க்கிறார்கள்?

மதுரபாரதியின் கண்ணாடி சொல்லும் கதைகள் படித்தபின் ஆச்சர்யமடைந்தேன். அதற்கான பின்னூட்டம்

சில நாட்களுக்கு முன் தான் நண்பரொருவர் பழந்தமிழர்கள் கண்ணாடி பற்றி அறிந்திருந்தார்களா என்று என்னிடம் கேட்டார். நான் அவருக்கு எந்த பதிலையும் சொல்லத் தெரிந்திருக்கவில்லை. உங்கள் பதிவைக் கண்ட பொழுது மிகுந்த ஆச்சர்யமடைந்தேன். அதுவும் மிகத்தெளிவான உதாரணங்களை, இலக்கிய சான்றுகளை குறிப்பிட்டது நன்று. மிக்க நன்றி. அதுவும் “அடுத்தது காட்டும்” என்ற வார்த்தைப் பிரயோகம் மிகவும் பொருந்துகிறது. பொதுவாக சாதி வகைப்பட்ட தொழில் துறை நம்முடையது. இப்படிப்பட்ட கண்ணாடித் (பளிங்கு) தொழில் அக்காலத்தில் எந்த சாதியினரால் செய்யப்பட்டது என்று ஏதேனும் குறிப்புகள் உள்ளனவா? நல்ல பதிவு.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.