Ntmani’s Weblog

செப்ரெம்பர் 2, 2006

குதிரை வீரன் பயணம் – வெண்மணி: பெரியாரின் எதிர்வினை

யூமா வாசுகியின் கவிதைகளும், கதைகளும் எனக்குப் பிடிக்கும். அதற்குக் காரணம் கவிதையிலும், கதையிலும் ஒரு ஓவியத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் சில அம்சங்களை கொண்டு வரமுடிகிற வகையில் அவர் எழுதுவதுதான். யூமா வாசுகி ஒரு ஓவியரும் என்பதால் அது அவருக்கு கைகூடி இருக்கலாம். எதற்காக இப்போது யூமா வாசுகியைப்பற்றி சொல்கிறேனென்றால், அவர் குதிரைவீரன் பயணம் என்ற சிற்றிதழை நடத்திவருகிறார் என்று அறிந்திருந்தேன். அச்சில் படித்ததில்லை. இன்று கீற்றைப் படித்துக்கொண்டிருந்த பொழுது குதிரைவீரன் பயணம் என்ற சிற்றதழைக் கண்டேன்.

இந்த இதழில் யூமா வாசுகியின் உருவாக்கம் எதுவும் இல்லையாயினும், அவர் மொழிபெயர்ப்பில் சிறுகதையொன்று இருக்கிறது. நான் இன்னும் படிக்கவில்லை.

இதைத் தவிர குறிப்பிட விரும்பிய இன்னொரு கட்டுரை, செல்வம் எழுதிய வெண்மணி: பெரியாரின் எதிர்வினை என்பதைத் தான். தலித்துகள் விடுதலை பற்றி அவர் கொண்டிருந்த பார்வை மிகவும் தனித்துவமானது. தலித்துகளினுடைய விடுதலையை அவர்களே முன்னெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர் உறுதியாக இருந்தார். சாதி முறைமையும், வர்ணாசிரமமும் மாறாமல் பொதுவுடமையும், தொழிலாளர் முன்னேற்றமும் சாத்தியமல்ல என்பது அவரது தீர்க்கதரிசனம்.

“கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும். ”

***

வெண்மணி: பெரியாரின் எதிர்வினை – செல்வம்

பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்தி ஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால் அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது. இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையை தவிர்க்கவியலாது என்பதிலும் பஞ்சமர்களின் விடுதலையின்றி சூத்திரர்களின் விடுதலையும் சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும்கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப்பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்கு கேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.

ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தைபெரியார் ஆற்றிய உரையிலிருந்து (குடி அரசு 4-12-1932) சிறுபகுதியொன்றை கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக அமையும்:

“உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக்கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன் உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம்பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்”

காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாக தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாக சொல்லிக்கொள்ளாத நேர்மையை அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசியபொழுது ‘நீங்கள், உங்களுடைய’ என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால் ‘பறையர்’ என்பதை விடவும் ‘சூத்திர’னென்பது இழிவானதென்றவர் ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரி பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே’ (குடி அரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்ட தவறியதில்லை.

பூனா ஒப்பந்தத்தின்போது பெரியார் ஐரோப்பியாவிலிருந்தபோதும் அம்பேத்கருக்கு ‘6, 7′ கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிட கேலவமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்’ என்று தந்தி கொடுத்ததுடன் ‘மகாத்மாவின் பொக்கவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ்பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும் கையெழுத்து போட்டதும் தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்ட’தென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது ரத்து செய்யப்பட வேண்டுமென’வும் (குடி அரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடி அரசு 8.11.1925).

பெரியாரின் சமகாலத்தியவர்களும் அவரால் மதிக்கப்பெற்ற தலைவர்களுமான முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம்மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, பார்ப்பனரல்லாதார் என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துகளல்லாதவர்களையும், இந்து மதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரென தள்ளி வைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது. இந்நிலையில் பெரியாரின்மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது.

‘நிறப்பிரிகை’யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா. அ. மார்க்ஸ் அவர்களும் அது குறித்து தமக்கு தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் : நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம். 1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.

வெண்மணி சம்பவத்தின்போது பெரியார் உடல்நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்து வந்தாரென்பதும் 28.12.68 அன்றுமாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி.வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக் கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது:

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும் பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது. சோவியத் ரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார் இந்திய கம்யூனிஸ்டுகளை எப்பொழுதுமே பொறுக்கித் தின்பவர்களென்றே அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழியவேண்டும்.’ (குடி அரசு 14.6.1931)

‘வருணாசிரமத்தையும் பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடையை ஏற்படுத்திவிட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும் சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச்செய்யும்…’ (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.

‘கம்யூனிஸ்ட்-எவன் காலை நக்கியாவது வயிறுவளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன்கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்’ (திருச்சியில் 4.11.1973 அன்று பேசியது) என்ற கணிப்பும் இன்றையவரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும் சமீப காலமாக கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.

கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933-ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்:

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள்நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்கவேண்டும். அப்படிக்கில்லாமல் ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்றுசேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்கவேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம்கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தக்கராறு என்பது, முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு, 1.10.1933).

“நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்கு கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படி செய்ய வேண்டும்” என்ற பகுத்தறிவு கட்டுரையும் (2.12.1934) “முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்’ என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும் “அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழமுடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின்மீது திரும்பவேண்டு’மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கது.

பெரியாரின் செம்பனார்கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக்கொள்ள இயல்கிறது. அந்நம்பிக்கையும் சிதறுண்டுபோய் அவர் “ஓட்டுகளுக்காக கூட்டிக் கொடுக்கவும் செய்வார்கள்’ என்று இறுதிக்காலத்தில் பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததை சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக்கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்கு காரணமாயிருந்தன.

கம்யூனிஸ்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில் இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனீயத்திற்கு துணைசெய்வதே ஆகும். ஜாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளை புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.

நன்றி: கீற்று.காம்

ஓகஸ்ட் 30, 2006

சோதனை

Filed under: பொதுவானவை — ntmani @ 1:40 பிப

இது ஒரு சோதனைப் பதிவு

ஜூன் 9, 2006

ஸ்ரீலங்காவில் கருணைக்கொலை

Filed under: பொதுவானவை — ntmani @ 7:38 பிப
Tags: ,

எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தோர், நடுநிலைவாதிகள், மார்க்சிஸ்டு பூசாரிகள், ஜனநாயகத்தூண்கள், ‘பெண்களாகதம்மைக் கருதுவோர், சமாதானச் சிறகு சுமந்து அலைகிறவர்கள், நல்லவர்கள் இதைக் காணுவதால் மனத்துயரடைய நேரலாம்.

ஸ்ரீலங்கா அரசு இன்று ஒரு விடுதலையை வழங்கியிருக்கிறது.  

தமிழர்க்கு வாழ்க்கை ஒரு நீண்ட துன்பமெனில் அதன் பிடியில் இருந்து நால்வரை விடுவித்திருக்கிறது. தனது குழந்தைகள் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு, வயிறு கிழிக்கப்பட்டு கொல்லப்பட்ட நினைவுகளை அவள் விதிக்கப்பட்ட வாழ்நாள் முழுவதும் சுமந்து அலையும் வேதனையில் இருந்து ஒரு தாய்க்கு விடுதலை வழங்கியிருக்கிறது.

தனது மனைவியையும், இளங்குருத்துக்களையும் மிருங்களையும் விட கேவலமான முறையில் புசித்தவர்களுக்கு முன் கையாலாகதவனாய் இருக்க நேர்ந்த துயரத்தை, எந்தச் சமாதானப் பிரியருக்கும் விவரிக்கவேண்டிய கொடுமையில் இருந்து ஒரு தந்தைக்கு விடுதலை வழங்கி இருக்கிறது.

அனாதையாய், தன் கண் முன்பே தன் பெற்றோர்கள் கொல்லப்பட்ட துயரத்தின் வடுவையும், வலியையும் வாழ்க்கைமுழுக்க சுமக்க வேண்டியிரா வண்ணம் ஒரு சிறுமிக்கும்,

நிராதரவாய், வஞ்சினத்தை வாழ்க்கை எங்கும் சுமந்து அமைதிக்கு பங்கம் விளைவித்து ஜனநாயகத்தின் குரல்வளையில் சதா கால்பதித்து திரிந்திருக்கவேண்டிய துயரத்தில் இருந்து, புலிகளின் சிறுவர் இல்லங்களில் வாழநேர்ந்துபலியாடுகள்என்று மார்ச்சிஸ்டு நல்லோர்கள் எண்ணத்தக்க கொடுமையில் இருந்து ஒரு சிறுவனுக்கும் விடுதலை அளித்திருக்கிறது. கருணை வாழ்க. அதன் புகழ் ஓங்குக. எல்லா மொழிகளிலும் அதனைப் புகழ்வோம்.ஜனநாயகமும், நடுநிலைமையும் தோள்கொடுக்காவிடில் இத்தகைய தியாகத்தை எம் மக்களுக்கு அவர்கள் செய்திருக்க முடியாதாகையால் அந்த உன்னதங்களுக்கும், அவைகளை நிலைநிறுத்த எல்லாவகையிலும் பாடுபடும் அனைவருக்கும் கண்ணீர் மல்க எம் நன்றியைச் சொல்கிறோம். இன்னும் விடுவிக்கப்படவேண்டியவர்கள்; பாவிகள் அனேகர் உள்ளனர் எனும் போது இவர்களுக்கான எம் நன்றி சொல்லில் அடங்காமல் போகிறது.

மார்ச் 14, 2006

காலச்சக்கரமும் ரிப் வான் விங்கிளும்

மார்ச் 7, 2006

வேதத்தில் சாதி இருக்கிறதா?

Filed under: பொதுவானவை — ntmani @ 3:58 முப

மார்ச் 2, 2006

சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?

Filed under: பொதுவானவை — ntmani @ 11:51 பிப

 பெரியார் தலித் தலைவர்களோடு இணைந்து செயல்பட முனையவில்லை என்பதையும், தலித் விடுதலையை அலட்சியப்டுத்தினார் என்பதையும் ஒரு உத்தியாக வகுத்துக்கொண்டு சிலர் பெரியாரை அகற்றும் வேலைக்கு கோடாரிக்காம்புகளை தயார் செய்கிறார்கள். அவர்களை முன்னிட்டும்..

தாழ்த்தபட்டவர்களுக்கு சமயம் சார்ந்த வாழ்வில் சமத்துவத்தையும், சுயமரியாதையையும் காட்டுவதற்காக  பெரியார் இஸ்லாமை ஒப்பீட்டளவில் தேர்ந்தெடுத்ததை/ சுட்டிக்காட்டியதை வைத்து  இஸ்லாமிற்கான வழக்குரைஞாராக அவரை சித்தரிப்பதை முன்னிட்டும்..

பெரியாரை எப்படியாவது சகித்துகொள்வதாகக் காட்டிக்கொள்ளமுடியுமா என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் இந்துத்துவாதிகளுக்கு இன்னுமொரு காரணத்தைக் கொடுக்கும் முன்னிட்டும்..

பெரியாருக்கு தலித் விடுதலையும், பெண்விடுதலையும், சமூகவிடுதலை/ சுயவிடுதலையின் பாதையில் கடக்கவேண்டிய பகுதிகளே அன்றி இறுதி நோக்கங்களாக இல்லை. அவருக்கு அதையும் தாண்டிய பார்வையும், வேட்கையும்  இருந்தது என்பதற்கு இன்னுமொரு புரிதலாகவும்

 அம்பேத்காரை சகித்துக்கொண்டு (அவரது பகுதிகளை திறம்பட மறைத்துக்கொண்டு) முன்னிருத்தும் இந்துத்துவ இயக்கங்கள் பெரியாரைக் கண்டு எரிவது (பயப்படுவது) ஏன் என்ற கேள்வியை இன்னொருமுறை வலியுறுத்திஇந்தக்கட்டுரையை கீற்றில் இருந்து எடுத்து  இங்கு பதிகிறேன். கீற்றுக்கு நன்றி.  

 ***

அம்பேத்கர், உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். அவர்கள் இவ்வளவு பெரிய அறிஞராக விளங்கக் காரணம் என்ன? படிப்பு, திறமை என்று சொல்வதெல்லாம் இரண்டாவதுதான். அவரைவிடப் படித்தவர்கள், திறமை உள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆகையால் அம்பேத்கர் பெரிய அறிவாளியாக விளங்கக் காரணம் அவரது படிப்பு, திறமை என்பவை மாத்திரமல்ல; அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அம்பேத்கர் ஒரு நாஸ்திகர். அவர் இன்றல்ல; நீண்ட நாளாகவே நாஸ்திகர். ஒன்று சொல்லுகிறேன். உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது. அவர் தனது சொந்த அறிவை உபயோகித்து, தான் கண்டதைத் தைரியமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். நம் நாட்டில் அறிஞர் கூட்டம் என்பவரெல்லாரும் எடுத்துச் சொல்லப் பயப்படுவார்கள். அவர் இதுபோலல்லாமல் தைரியமாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறார். இப்பொழுது அதிசயமாக உலகம் பூராவும் நினைக்கும்படியான சம்பவம் ஒன்று நடந்தது. அதுதான் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்தது. இப்போது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர, அம்பேத்கர் வெகுநாட்களாகவே புத்தர்தான்.
1930 – 35லேயே சாதி ஒழிப்பில் தீவிர கருத்துள்ளவராக இருந்தார்; சாதி ஒழிப்புக்காக பஞ்சாபில் (“ஜாத் பட் தோடக் மண்டல்’ என்று கருதுகிறேன்) ஒரு சபை ஏற்படுத்தியிருந்தார்கள். என்னைக்கூட, அதில் ஓர் அங்கத்தினராகச் சேர்த்திருந்தார்கள். அந்தச் சபையினர் சாதி ஒழிப்பு மாநாடு என்பதாக ஒரு மாநாடு கூட்ட ஏற்பாடு செய்து, அந்த மாநாட்டுக்கு அம்பேத்கர் அவர்களைத் தலைமை வகிக்கக் கேட்டுக் கொண்டார்கள். அவரும் ஒத்துக் கொண்டு தலைமை உரையாக 100 பக்கம் ஆங்கிலத்தில் எழுதினார். அதில் பல ஆதாரங்களை எடுத்துப்போட்டு, சாதி ஒழிய இந்து மதமே ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். இதைத் தெரிந்து அவரிடம் “உங்கள் மாநாட்டுத் தலைமை உரையை முன்னாடியே அனுப்புங்கள்’ என்று கேட்டு வாங்கிப் பார்த்தார்கள். அதில் ஆதாரத்தோடு இந்து மதம் ஒழிய வேண்டும் என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்துவிட்டு, “உங்கள் தலைமையுரை எங்கள் சங்க மாநாட்டில் படிப்பதற்கு ஏற்றதாக இல்லை. இது சாதி ஒழிப்புச் சங்கமே தவிர, இந்து மத ஒழிப்புச் சங்கமல்ல; ஆகையால் நீங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்கிற அந்த ஒரு அத்தியாயத்தை நீக்கிவிட வேண்டும்” என்று அம்பேத்கரிடம் கேட்டார்கள்.
அதற்கு அம்பேத்கர் ” சாதி ஒழிப்பிற்கு இந்து மதம் ஒழிய வேண்டும்’ என்கிறதுதான் அஸ்திவாரம். அதைப் பேசாமல் வேறு எதைப் பேசுவது? ஆகையால் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். பின் மாளவியா ஏதேதோ சமாதானமெல்லாம் சொன்னார். அதற்கும் அவர், “நான் தலைமை உரையைப் பேசுகிறபடி பேசுகிறேன்; நீங்கள் வேண்டுமானால் அதைக் கண்டித்து மாநாட்டில் பேசுங்கள்; தீர்மானம் வேண்டுமானாலும் போடுங்கள், நான் முடிவுரையில் அதுபற்றிப் பேசுகிறேன்” என்று சொல்லிவிட்டார். பிறகு மாநாடே நடக்காமல் போய்விட்டது.

நான் அம்பேத்கரிடம் அந்தப் பேச்சை வாங்கி, “சாதியை ஒழிக்கும் வழி’ என்று தமிழில் புத்தகமாகப் போட்டு வெளியிட்டேன். அவர் அப்போதே அவ்வளவு தீவிரமாக இருந்தார். நாம் ராமாயணத்தைப் பற்றி வாயால் பேசிக் கொண்டிருக்கும் போதே, அதாவது 1932இலேயே அவர் ராமாயணத்தைக் கொளுத்தினார். அந்த மாநாட்டுக்கு என். சிவராஜ் தான் தலைவர். இதெல்லாம் “குடியரசில்’ இருக்கிறது. நான் 1930இல் ஈரோட்டில் நடந்த சீர்திருத்த மாநாட்டிற்கு அம்பேத்கரை அழைத்தேன். என்ன காரணத்தாலோ அம்பேத்கர் வரவில்லை. அவருக்குப் பதிலாக எம்.ஆர். ஜெயகர் வந்திருந்தார். அம்பேத்கர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் இஸ்லாம்ஆகப் போகிறேன் என்று சொன்னார். நானும் எஸ். ராமனாதனும் இங்கிருந்து தந்தியடித்தோம். “தயவு செய்து அவசரப்பட்டு சேர்ந்து விடாதீர்கள். குறைந்தது ஒரு லட்சம் பேராவது கூட பின்னால் வந்தார்கள் என்றால்தான் அங்கும் மதிப்பிருக்கும்; இல்லாவிட்டால் மவுலானார் சொல்கிறபடித்தான் கேட்க வேண்டும். அவர்களோ கை வைக்கக் கூடாத மதம் (perfect religion) என்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்கள். எவனுக்குமே கை வைக்க உரிமையில்லை என்பவர்கள். வெறும் தொழுகை அது இது எல்லாம் உங்களுக்கு ஜெயில் போலத்தான் இருக்கும். தனியே போவதால் அங்கும் மரியாதை இருக்காது” என்று தந்தியில் சொன்னோம். அதன் பிறகு யார் யாரோ அவர் வீட்டிற்குப் போய் மதம் மாறக் கூடாதென்று கேட்டுக் கொண்டார்கள். பத்திரிகையில் வந்தது. அப்போதே அவர் மதம் மாறுவதில் தீவிர எண்ணம் வைத்திருந்தார். எப்படியோ கடைசியாக, இப்போது புத்த மதத்தில் சேர்ந்துவிட்டார். என்றாலும் அவர் ஏற்கனவே புத்தர்தான்.

(28.10.1956 அன்று, வேலூர் நகராட்சி மன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு)

நன்றி: கீற்று

பிப்ரவரி 24, 2006

இரா. செழியன் – பெரியார் விருது – இடஒதுக்கீடு

குமுதம் தீராநதியில் வெளியான க. பஞ்சாங்கம் எழுதிய இந்தக்கட்டுரையை என்னுடைய சொந்தசேகரிப்புக்கும், நண்பர்களின் வாசிப்புக்குமாக இங்கு பதிவு செய்கிறேன். கட்டுரையாசிரியர்/ பதிப்பாசிரியர்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் இக்கட்டுரை இங்கிருந்து நீக்கப்படும். ஆசிரியருக்கும், குமுதம் தீராநதிக்கும் என் நன்றி! (தடித்த எழுத்துருக்கள் கொண்ட பகுதிகள் என் வாசிப்பில் குறிப்பிட விரும்புகிறவைகள் எனக்கொள்ளவும்.)

* * *

திராவிட அரசியலில் காணக் கிடைக்கும் ஒன்றிரண்டு மேன்மையான மனிதர்களில் ஒருவர் இரா.செழியன். சிறந்த படிப்பாளி; சிறந்த பாராளுமன்றவாதி; எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தச் சூழலிலும் அரசியலில் சமரசத்திற்குள்ளாகிச் சரிந்து போகாமல் நிமிர்ந்து நிற்பவர். மத்திய அரசு ‘தொகுதி மேம்பாட்டிற்காக ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி ரூபாய் மக்கள் பணத்தைத் தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரிடம் தூக்கிக் கொடுப்பது, எவ்வளவு பெரிய மோசடி! மக்களாட்சி முறைக்கு எதிரானது’ எனக் குரல் கொடுத்த முதல் பாராளுமன்றவாதி. 2005ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பெரியார் விருதினை (ரூ.1 லட்சமும் தங்கப் பதக்கமும்) இரா. செழியனுக்கு வழங்கியதன் மூலம் தமிழ்நாடு அரசு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளது.

பரிசு ஏற்பு விழாவில், இரா.செழியன், தன் கொள்கைப்பிடிப்போடு தெரிவித்த கருத்து, இன்றைய உலகமயமாதல் சூழலில், தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டிற்கான மசோதா நிறைவேறிய சூழலில், சிந்திக்கத்தக்க ஒன்றாகும். ‘‘இடஒதுக்கீட்டு முறை தகுதியுடையவர்களுக்கு எதிரானதல்ல; மேலும் அம்முறையினால் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் முன்வைத்த கருத்தான, ‘தகுதியுடையவர்கள் புறந்தள்ளப்படுவார்கள்’ என்பதும் நிகழ்ந்துவிடவில்லை’’ என்ற கருத்தை, முன்வைத்துள்ளார் அவர். பெரியார் விருதைப் பெறுகிற ஒரு நிகழ்ச்சியில், இக்கருத்தைக் அவர் கூறியதன் பொருள் என்ன? பெரியாரின் ‘ஆகப்பெரும்’ சாதனையாக இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தைத்தான் அவர் கருதுகிறார் எனப்படுகிறது.

காங்கிரஸ் மாநாடுகளில் பெரியார் கொண்டுவந்த ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்று அழைக்கப்பட்ட இட ஒதுக்கீடு தீர்மானம் மட்டும், காங்கிரஸில் பெருவாரியாக இருந்த பிராமணர்களால் தோற்கடிக்கப்படாமல் நிறைவேறியிருந்தால், பெரியார் 1925இல் காங்கிரசுக் கட்சியை விட்டு வெளியே வந்திருக்க மாட்டார்; சுயமரியாதை இயக்கம் தோன்றியிருக்காது; தி.க.(1944) உருவாகியிருக்காது; தி.மு.க. (1949) பிறந்திருக்காது; அ.தி.மு.க. (1972) அரும்பியிருக்காது; ம.தி.மு.க. (1993) மலர்ந்திருக்காது. 20_ஆம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றுப்போக்கே காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை இயக்கங்களின் வரலாறாகப் போயிருக்கும். அந்த அளவிற்குப் பெரியாரின் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ குறித்த முயற்சிகள் மிக முக்கியமானவைகளாக அமைகின்றன. அதனால்தான் இரா. செழியன் அது குறித்து அந்த மேடையில் பேசி இருக்கிறார். இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த இந்த ‘இட ஒதுக்கீடு அரசியல்’ எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வளர்ச்சி அடைந்தது? சமீபத்திய இந்திய வரலாற்றில் இது குறித்த புரிதல் என்னவாக இருக்கிறது என்பனவற்றைக் காண்பது தேவையான ஒன்றாகும்.

மக்களிடம் உருவாகும் சுதந்திர உணர்வின் பெருக்கத்தை அறிந்த ஆங்கிலேய அறிவாளிகள், அதை ஓர் இயக்கமாக வளர்த்தெடுக்கக் காங்கிரஸ் கட்சியை 1885இல் உருவாக்கியது போலவே, இடஒதுக்கீட்டின் தேவையையும் உணர்ந்த ஆங்கில அதிகாரிகள் 1884இல் முதன்முதலில் ஓர் ஆணை பிறப்பித்தார்கள். இதுதான் அந்த ஆணை: சென்னை வருவாய்த்துறை அலுவலகம்; ஆணை எண் 128(2). ‘மாவட்ட ஆட்சியாளர்கள், தங்கள் அலுவலகத்திலுள்ள அனைத்து நிர்வாகப் பதவிகளையும் குறிப்பிட்ட ஒரு சாதியினரே பெறுவதைத் தவிர்த்து, பிற சாதிகளைச் சேர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டும்’. ஆனால், யதார்த்தத்தில் _ சாதியச் சமூகத்தில் _ ஏற்கெனவே கல்வியை மற்றவர்களுக்கு மறுத்துத் தங்களுக்கானதாக ஆக்ரமித்திருந்த பிராமணர்களே பெரிதும் படித்தவர்களாக விளங்கிய சூழலில், தொடர்ந்து பிராமணர்களே அரசாங்கப் பதவிகளைக் கைப்பற்றினார்கள். மக்கள் தொகையில் 3 விழுக்காடு இருந்த பிராமணர்களே பொதுப்பணித்துறையில் 74 விழுக்காடும் வருவாய்த் துறையில் 50 விழுக்காடும், நிதித்துறையில் 6 விழுக்காடும், கல்வித்துறையில் 79விழுக்காடும் இடம்பெற்றிருந்தனர் என்கிறது 27.01.1919 இல் வெளியான அரசாங்கப் பதிவேடு. இத்தகைய சூழலில் தாழ்த்தப்பட்ட இனத்தினர் அன்று அடைந்த எழுச்சி குறிப்பிடத்தக்கதாகும். கிராமங்களில் _ நிலவுடைமைச் சமூகத்தில் _ தங்களின் இருப்பிடமும் நடமாடும் இடங்களும்கூட, உயர்சாதியினரால் நிர்ணயிக்கப்பட்டு, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைக்கு உட்பட்டு மூச்சுமுட்டக் கிடந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, ஆங்கிலேயர் ஆட்சியினால் ‘இடம்’ பெயரவும் கல்வி கற்கவும் வாய்ப்புகள் வந்து கூடின. ஆங்கிலமொழிக் கல்வி புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்தது.

இந்தச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து, அவர்களைத் திரட்டி, அவர்களுக்காகச் சிந்தித்துச் செயல்பட்ட முன்னவராக விளங்கியவர் அயோத்திதாஸ பண்டிதர் (1845_1914). இவர் அம்பேத்காருக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டுச் சிந்தனையை, சமூக அரசியல் தளத்தில் முன்னெடுத்தவர்; 1891 டிசம்பர் 1ஆம் தேதி ஊட்டியில், அயோத்திதாஸ பண்டிதர் கூட்டிய திராவிட மகாஜன மாநாட்டில் போடப்பட்ட தீர்மானமே, முதல் இடஒதுக்கீட்டுத் தீர்மானமாகும். ‘கிராம அலுவலர் உட்படப் பல அரசாங்கப் பணிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதன் மூலம், அவர்களின் பொருளாதார வாழ்வை உயர்த்துமாறு’ கோருகிறது. அந்தத் தீர்மானம். தீர்மானம் போட்டதோடு நிற்காமல், போராடி இரண்டு இடஒதுக்கீட்டு ஆணைகளையும் பெற்றுள்ளார் பண்டிதர்.

தொடர்ந்து 20.11.1916 அன்று ‘பிராமணர் அல்லாதார்’ என்ற பெயரில், பிராமணர் அல்லாத உயர்சாதியினர் கூடி ‘நீதிக்கட்சி’ தொடங்கியபோது, அவர்களின் செயல்திட்டங்களில் ஒன்றாக முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கை இடம்பெற்றது. 1919இல் உருவான இந்திய அரசுச் சட்டத்தின்படி, லார்ட்மெடன் என்பவர் தலைமையில் முக்கியமான ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது; அதன்படி 65 பொதுத்தொகுதிகளில் 24 இடங்கள் பிராமணர் அல்லாதாருக்கும், மீதி இடங்களில் எல்லோரும் பொதுவாகப் போட்டியிடலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பிராமணர் அல்லாதாருக்கு அரசியல் அதிகாரம் பெற வாய்ப்பளித்த இந்த ஒப்பந்தத்தின் காரணமாக, ‘நீதிக்கட்சி’ சென்னை மாகாணத்தில் ஆட்சியில் அமர்ந்தது; அமர்ந்தவுடன் முதல் வேலையாக 1921இல் இடஒதுக்கீட்டிற்கான அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி 12 இடம் இருந்தது என்றால், 5 இடம் பிராமணர் அல்லாதவர்களுக்கும், 2 இடம் பிராமணர்களுக்கும், 2 இடம் இஸ்லாமியர்களுக்கும், 2 இடம் ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்தவர்களுக்கும், ஒரு இடம் ‘மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும்’ தரப்பட வேண்டும்; அதுவும் கீழ்க்கண்ட வரிசைப்படித் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது : பிராமணர் அல்லாத இந்து, இஸ்லாமியர், பிராமணர் அல்லாத இந்து, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர், பிராமணர், பிராமணர் அல்லாத இந்து, மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள், பிராமணர் அல்லாத இந்து, இஸ்லாமியர், பிராமணர் அல்லாத இந்து, ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர், பிராமணர். இந்த வரிசையில் பிராமணர் அல்லாத உயர்சாதியினரின் கை மேலோங்கி, பிராமணரின் கை தாழ்ந்துபோன சூழலை அவதானிக்க முடிகிறது; மேலும் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து எத்தகைய பார்வையை அன்று கொண்டிருந்தது என்பதை, ‘மற்றவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள்’ என்று ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கியிருக்கும் பாங்கில் இருந்தே அறிந்து கொள்ளலாம். இந்தப் போக்கு ‘பிராமணர் அல்லாதார்’ அரசியலில் தொடர்ந்து நீடித்து வந்துள்ளது.

1947ஆம் ஆண்டில் ஓர் இடஒதுக்கீட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணைப்படி பிராமணர் அல்லாத இந்துக்கள் 43 விழுக்காடும், பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் 14 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவர்கள் 14 விழுக்காடும், பெற வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுப்புமுறையிலும் தாழ்த்தப்பட்டவர்களைவிட, ‘பிராமணர் அல்லாத உயர்சாதியினர்’ நலமே முன்னிறுத்தப்படுவதை எளிதாக அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த ஆணையை உச்சநீதிமன்றம் இன்று செய்வது போலவே அன்றும் நிராகரித்தது. எனவே 1951ஆம் ஆண்டு மற்றொரு ஆணை போடப்பட்டது. அதன்படி, எல்லோருக்கும் பொதுவாக 60 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவருக்கு 15 விழுக்காடும் ஒதுக்கப்பட்டன. 1951இல் ஆந்திர மாநிலம் பிரிந்த பிறகு, 1954ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சராக வந்தார்; பெரியார் காமராசரை வரவேற்றுப் போற்றினார்; அத்தகைய சூழலில் ஓர் ஆணை வருகிறது. அந்த ஆணையின் படி, எல்லோருக்கும் பொதுவாக 59 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 16 விழுக்காடும் கிடைக்கின்றன. இதற்கிடையில் 1950இல் மத்திய அரசின் அம்பேத்கர் வகுத்தளித்த இடஒதுக்கீட்டு ஆணையால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 19 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு என்ற நிலை ஏற்படுகிறது.

மத்திய அரசுப் பதவிகளில் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்ற பிரிவினர் பங்கு பெறுவதற்கு, வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முனைந்த ஆண்டான 1990 வரை காத்திருக்க வேண்டியதாயிற்று என்பதோடு இணைத்து எண்ணிப் பார்க்கும்போதுதான், தமிழகத்தில் பெரியார் என்ற மாபெரும் சக்தியின் பெருமையை அறிந்துகொள்ள முடியும்; அதேநேரத்தில் 1944இல் பெரியார் உயர்சாதிக்காரர்களுக்கான நீதிக்கட்சியோடு இணைந்ததால், பெரியாரின் இயக்கம் பிற்படுத்தப்பட்டவருக்கான இயக்கமே ஒழிய, தலித்துகளுக்கான இயக்கம் அல்ல என்று இன்றைய தலித் சிந்தனையாளர்கள் வைக்கிற விமர்சனத்தையும் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.

மத்திய அரசாங்கத்திலும் அரசியல் சட்டம் 340 விதிகளின்படி, 1953ஆம் ஆண்டு முதல் ‘பிற்படுத்தப்பட்டோர் குழு’ குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. இக்குழுவின் தலைவர் காகா கலேல்கர். அந்தக்குழு இந்தியா முழுவதும் சுற்றி, நேரடியாக 182 வினாக்கள் அடங்கிய வினாத்தாளைக் கொடுத்துத் தகவல்களைத் திரட்டியது. இத்தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் மொத்தம் 2399 சாதிகள் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன என்றும், 830 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன எனவும் அடையாளம் காட்டியது. மேலும் இச்சாதியினர் முன்னேற நிலச்சீர்திருத்தம், வயது வந்தோர் கல்வி, அரசு வேலைவாய்ப்பு உட்பட பல காரியங்களைச் செய்தாக வேண்டும் எனவும் பரிந்துரைத்தது. மேலும், ‘சாதிவாரியாக மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; இந்து சமூகத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் சாதிய முறையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பிற்படுத்தப்பட்ட தன்மையை மதிப்பிட வேண்டும் பெண்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 70 விழுக்காடு இடம் ஒதுக்க வேண்டும்’ எனவும் பரிந்துரைத்தது. ஆனால் காகா கலேல்கர் கமிஷன் அறிக்கை, உயர்சாதியினர் நிறைந்த அரசியல் சட்ட நிபுணர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் புறக்கணிக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் 1967இல் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கிறது. பிற்படுத்தப்பட்டோரின் ஆட்சியாக அது பரிணமித்தது. 1971இல் கருணாநிதி அரசு, காமராசர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பட்டியலில் இருந்த எல்லோருக்கும் பொதுவாக 59 விழுக்காடு என்றிருந்ததை 51 விழுக்காடு எனக் குறைத்து, கூடுதலாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 31 விழுக்காடும் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 18 விழுக்காடும் ஒதுக்கினார்.

ஆனால் கருணாநிதி ஆட்சியில் போடப்பட்ட ஓர் ஆணை, இடஒதுக்கீட்டின் அடிப்படைக்கு அறமாக அமைந்ததையே கேலிக்குள்ளாக்கி விட்டது. அதாவது, முன்னேறிய சாதிகள் என்று பொதுப்பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சாதிகளில் 30 விழுக்காட்டினரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து இணைத்தது அந்த ஆணை. இது உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்நிலையில் பிற்படுத்தப்பட்டவருக்கான ஒதுக்கீடு இன்னும் அதிகம் தேவை என்ற போராட்டம் வலுத்தபோது, 1980ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். அரசு 31இல் இருந்து 50ஆக உயர்த்தியது. அதே நேரத்தில் எம்.ஜி.ஆர் அரசும், பொதுப்பட்டியலில் இருந்த உயர்சாதிக்காரர்களில் 5 விழுக்காட்டினரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்துவிட்டது. இதனால் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பெரிதும் பின்னடைவு ஏற்படும் நிலையில், வன்னியர் போராட்டம் (1987) வெடித்தது. இப்போராட்டத்தின் விளைவாக, 1989ஆம் ஆண்டு கருணாநிதி அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காட்டையும் உடைத்து, வன்னியர் மற்றும் சீர்மரபினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பிரித்து, அவர்களுக்கு 20 விழுக்காடும் மற்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடும் என ஆணையிட்டது. இவ்வாறு வன்னியர் என்ற குறிப்பிட்ட சாதியினரின் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கண்டாலுங்கூட, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உயர்சாதியினர் பலரையும் உள்ளே இணைத்தது இடஒதுக்கீட்டுக்கொள்கையின் அடிப்படைத் தருமத்தையே நீர்த்துப்போகச் செய்துவிட்டது. மேலும் முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், விதவைகள், தியாகிக் குடும்பத்தினர், கைவிடப்பட்டோர், விளையாட்டு வீரர் என இடஒதுக்கீட்டை விரிவுபடுத்தியதன் மூலமாகவும், ஒரு சாதியச் சமூகத்தில் ‘சமூக நீதி’ என்ற ஒன்றின்மேல் எழுப்பப்பட்ட இட ஒதுக்கீட்டு தத்துவத்தை, ‘வெறும் சலுகை’ என்று உணரும்படியாகத் தரம் தாழ்த்திவிட்டது, உயர்சாதி ஆதிக்க அரசியல்.

உயர்சாதி இந்துக்களின் செல்வாக்கிலேயே இருந்த காங்கிரஸ் ஆட்சி முடிகின்ற வரை பிற்படுத்தப்பட்டோரைப் பற்றிக் கவலைப்படாத போக்கு மத்தியில் தொடர்ந்தது. 1977இல் ஜனதா கட்சி ஆட்சிப்பொறுப்பையேற்றவுடன், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த பி.பி.மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது. இக்குழு இந்தியா முழுவதும் இலட்சக்கணக்கான மக்களையும் சட்டமன்ற, பாராளுமன்ற, சாதிச்சங்க உறுப்பினர்களையும் சந்தித்து 1980ஆம் ஆண்டு தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால் மீண்டும் வந்த காங்கிரஸ் அரசு அதைப் பொருட்படுத்தவேயில்லை. பல்வேறு நெருக்கடிகள் கொடுத்த பிறகு 1983ஆம் ஆண்டு மண்டல் குழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத்தில் வெளியிட்டது. ஆனால் அமல்படுத்த முயலவில்லை. மீண்டும் வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி அரசு (1990) ஆட்சிக்கு வந்தபோது, பல்வேறு எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், வி.பி.சிங், மண்டல் குழு அறிக்கை என்ற ‘பண்டோரா பெட்டி’யைத் திறந்து விட்டார். இதுவரை, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு என்பதையே கேள்விப்படாத வடநாட்டு மாநிலங்களில், குறிப்பாக உ.பி. போன்ற மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இராமஜன்ம பூமி, பாபர் மசூதி போன்ற விவகாரங்களைக் கிளப்பிவிட்டு வி.பி.சிங் அரசைக் கவிழ்த்தது ஆதிக்க சாதியினரின் அரசியல். எட்டு மாதமே ஆண்ட வி.பி.சிங், 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 13ஆம் தேதி மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும் மண்டல் குழுவால் பரிந்துரைக்கப்பட்டன. அவ்வாணை இந்தியத் தேசத்தின் வரலாற்றை மண்டல்குழு அறிக்கையை அமல்படுத்துவதற்கு ‘முந்தைய இந்தியச் சமூகம்’ என்றும், ‘பிந்திய இந்தியச் சமூகம், என்றும் இரண்டாகப் பிளந்தது என்று சொல்லத்தக்க அளவிற்கு இன்றியமையாத ஓர் ஆணையாகும்.

மண்டல்குழுவை அமல்செய்து பாராளுமன்றத்தில் பிரதமர் வி.பி.சிங் ஆற்றிய உரை, இடஒதுக்கீட்டரசியலின் அடிப்படைத் தருமத்தைப் புதுப்பிப்பதாக இருந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வைக்கப்படும் தகுதி, தரம் என்ற விவாதத்தைத் தகர்த்தார் வி.பி.சிங். மண்டல் குழுவின் தலைவரான மண்டல், ‘‘தகுதி, தரம் என்பது என்ன? நான்கு அறைக்குள் படித்து மதிப்பெண் வாங்குவதுதானா தரம்? அதைவிட நாட்டின் நிலையறிதல்; தன் மக்களின் நிலையறிய அவர்களோடு கலத்தல்; அவர்களின் வாழ்நிலையை, தேவையைப் புரிதல்; இவைதான் தகுதி, தரத்துக்கான அடையாளம். இவற்றில் முன்னேறிய உயர்சாதிகளைவிடப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் சிறப்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர்’’ என்றார். மேலும், உயர்சாதிக்காரர்களே தங்களைத் தகுதியானவர்கள் எனக் கட்டமைத்துக்கொண்டு ஆண்டுகொண்டிருக்கும் பீஹார் மாநிலத்தின் நிர்வாகச் சீர்கேடுகளைச் சுட்டிக் காட்டினார். ‘‘பொதுத்துறை நிர்வாகம் அனைத்தையும் ‘தகுதி’யுடைய உயர் வகுப்பினர்தான் நிர்வகித்துக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் ஆண்டொன்றுக்கு ரூ.2000 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது ஏன்? இதற்கு மாறாகத் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களில், நீண்ட நாட்களாகவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், அங்கே நிர்வாகமும் சமூக முன்னேற்றமும் பீஹாரை விடச் சிறந்து விளங்குகின்றன.’’ என்பதையும் சுட்டிக் காட்டினார். பெரியாரின் மகத்துவம் எத்தகையது என்பதையும் மண்டல் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். அடிப்படையில், இடஒதுக்கீது என்பது சமூகத்தில் பின்தள்ளப்பட்டவர்களின் பொருளாதார வளத்தைப் பெருக்குவது என்பது மட்டுமல்ல; அது ஒரு சாதியச் சமூகத்தின் சமூக நீதியாகக் கருதத்தக்கது. சாதியச் சமூகத்தில் ஏழ்மை (அ) வறுமை உயர்சாதிக்காரர்களிடம் வெளிப்படுகிறது என்றால், அதற்குக் காரணம் பொருளாதாரப் பற்றாக்குறை மட்டுமே. ஆனால், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் ஏழ்மைக்குக் காரணம் சாதியச் சமூகம் கட்டமைத்த சமுதாய ஏற்றத்தாழ்வாகும். இடஒதுக்கீடு இந்த ‘சமுதாய ஏற்றத்தாழ்வு’களைப் போக்குவதற்கான கருவியாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அரசாங்கப் பணியில், இடஒதுக்கீட்டின் மூலமாக வந்தமர்கிற வாய்ப்பு கிடைக்கிறபோது, ‘அரசாங்க நிர்வாகத்தில் தாங்களும் பங்கெடுக்கிறோம்; தாங்களும் ஒரு பொருட்டாக மதிக்கப்படுகிறோம்’ என்கிற மனவியல் ஏற்படுகிறது. இதனால் ஒதுக்கப்பட்ட (அ) ஒதுங்கிக்கொள்ளும் நிலைமாறி, தேசிய நீரோட்டத்தில் கலந்து, சுயமரியாதை கொள்ளவும் தன்னம்பிக்கை கொண்டு நாட்டு நடப்புகளில் அக்கறை கொள்கிற தன்மையும் ஏற்படுகின்றன. இவை மிகப் பெரிய சமூக விளைவுகளை ஆழமாகவும் அகலமாகவும் ஏற்படுத்த வல்லவை. தேசத்தின் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்திக் காட்டக்கூடியவை.

இத்தகைய மெய்ம்மைகளையெல்லாம் உயர்சாதியினர் இன்னும் ஏற்கத் தயாராக இல்லை. இந்திய அரசின் அடிப்படைச் சட்டம் 15(4), 16(4) ஆகிய பிரிவின்கீழ், இடஒதுக்கீடு எந்தக் காரணத்தைக் கொண்டும் 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாதென்று அரசியல் சட்டத்திலேயே தங்களுக்கேற்றவாறு விதிகளை ஏற்படுத்தி வைத்துக்கொண்ட உயர்சாதியினர், கொஞ்சமும் வரலாற்றுணர்வோ, மனிதாபிமானப் பார்வையோ இன்றித் தொடர்ந்து இடஒதுக்கீட்டிற்கு எதிரான குரலை எழுப்பிக் கொண்டேயிருக்கின்றனர். தங்கள் கையில் வைத்துள்ள, வேறு யாரும் போட்டி போட முடியாத அளவிற்கான ஊடகங்களின் பேராற்றல் மூலம், பிரச்சாரம் செய்து கொண்டேயிருக்கின்றனர். நானி பல்கிவாலா என்பவர், இந்திய அரசு, மண்டல் குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டது இமாலயத் தவறு என்றும், விடுதலை இந்தியா அம்பேத்காரின் இடஒதுக்கீட்டுக் கொள்கையினால் மாபெரும் கேட்டிற்குப் பழியாகிவிட்டது என்றும் பட்டியலிடுகிறார். அவர் கூற்றுப்படி, 1. தகுதியைப் பற்றிக் கவலைப்படாமல் ‘சாதி’ அடிப்படையில் அரசாங்கப் பணிகளை நிரப்புவதால், அதிகாரக் கடிவாளங்கள், திறமையானவர்களிடமிருந்து திறமையற்றோர்க்குக் கைமாறி விடும்; 2. சாதியை முன்னிறுத்தி இடஒதுக்கீடு செய்யப்படுவதால் ஏழை பிராமணனுக்கும் பணக்கார தலித்துக்குமிடையேயான வேறுபாடு மறைக்கப்படுகிறது; 3. பிற்பட்ட சாதிகள் என்று எதுவுமில்லை, பிற்பட்ட நபர்கள்தான் உள்ளனர்; 4. பதவி உயர்வுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்படுவதால், சிவில் நிர்வாகம் அழிந்து போகும்; இராணுவத்திற்குள்ளும் பேரழிவு ஏற்படும்; நாட்டின் முன்னேற்றமும் பாதுகாப்பும் பாதிக்கப்படும்; 5. இந்திய வரலாற்றுக் குப்பைத்தொட்டியில் தூக்கிப் போட வேண்டிய சாதி முறைகள் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் புத்துயிர் பெற்றுவிட்டன; 6. இந்தியா சமத்துவச் சமுதாயத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இட ஒதுக்கீட்டுக் கொள்கை சமத்துவமின்மையை சாசுவதமாக்கிவிட்டதால், மேலும் இப்படிப் பிற்பட்டுப் போன நாட்டிற்காக _ பிற்பட்டுப்போன மக்களுக்காக _ ஒரு புதிய பிற்பட்ட அரசியல் சட்டத்தைத்தான் எழுதிக் கொள்ள வேண்டுமென்றும் கிண்டல் அடிக்கிறார். உண்மைகளை எப்படியெல்லாம் சாதுரியமாகத் திரிக்க முடியும் என்பதற்கு இதைவிட சான்று வேறென்ன இருக்க முடியும்? ஆதிக்க சாதியினரின் மேற்கண்ட விவாதங்களுக்கு பெரியார், மண்டல் உட்படப் பலரும் எத்தனை தடவை பதில் சொன்னாலும் ஆதிக்க சாதியினரின் காதில் நுழையவே மறுக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், இட ஒதுக்கீட்டின் மூலம் பண உதவி பெற்று, கல்வி கற்று, வேலையும் வாங்கி, வசதியாய் வாழ்கிற தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பலரும்கூட, ‘உண்மைதான்; தரம், தகுதிதான் முக்கியம் என்று பேசுகிற பேச்சையும் இன்று கேட்க நேர்வதுதான் இதைவிடப் பெரிய கொடுமை. மண்டல்குழுவை வி.பி.சிங் அமல்படுத்தியவுடன், அதற்கு எதிராக உயர்சாதிக்காரர்கள் கிளப்பிவிட்ட வடநாட்டுக் கலவரத்தில் பங்கெடுத்தவர்களில், ‘பிற்படுத்தப்பட்டவர்களும்’ இருந்தனர் என்பதுதான். மண்டல் எதிர்ப்பில் முன்னணித் தலைவராக விளங்கிய கான்பூர் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் என்.என். பால். பிற்படுத்தப்பட்டவர். அக்கலவரத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானவர்களில் 32 மாணவர்கள் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாவர். உயர்சாதிக்காரர்களின் ஊடக ஆற்றலும் சூழ்ச்சியும் தந்திரமும் அந்த அளவிற்கு வலுவாக இருக்கின்றன. இடஒதுக்கீட்டிற்கெதிரான உயர்சாதி ஆதிக்கச் சக்திகளின் தந்திரமான செயல்பாட்டிற்கு மற்றொன்றையும் சான்றாகக் காட்டலாம். மண்டல் குழு அறிக்கை அமல்படுத்திய பிறகு வந்த பி.ஜே.பி. ஆட்சிக்காலத்தில் சத்தமில்லாமலொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவக்கல்லூரியில் பட்டமேற்படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு, அகில இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அந்த அகில இந்தியத் தேர்விற்கு ஒவ்வொரு மாநிலமும் தங்களிடமுள்ள மொத்த இடத்தில் 25 விழுக்காட்டை ஒப்படைத்துவிட வேண்டும். இப்பொழுது உச்சநீதிமன்ற ஆணைப்படி, 50 விழுக்காடு இடத்தை ஒப்படைத்துவிட வேண்டும். இதிலுள்ள முக்கியமான கூறு என்னவென்றால், அகில இந்தியத் தேர்வில் எந்தவிதமான இடஒதுக்கீடும் கிடையாது என்பதுதான். 3000 இடம் இருக்கிறதென்றால் அவ்வளவும் ‘மதிப்பெண்’ அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது. மாநிலங்கள் மூலமாக அந்த 50 விழுக்காடும் நிரப்பப்பட்டால் எஸ்.சி/எஸ்.டி., பி.சி. இடஒதுக்கீடு கிடைக்கும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய ஒரு சூழலில்தான், இரா. செழியனுக்குக் கொடுக்கப்பட்ட பெரியார் விருதும், அவ்விருதில் அவர் பேசிய பேச்சும் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இடஒதுக்கீடு என்பது ஏதோ இந்தியாவில் மட்டும்தான் என்பதில்லை; முன்னேறிய நாடாகக் கருதப்படும் அமெரிக்காவிலேயே பின்தங்கிய கறுப்பர்கள் தங்களுக்கான இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் தனியார் நிறுவனங்களிலும்கூட அவர்களுக்கான ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பதை கெயில் ஓம்வெட் சுட்டிக்காட்டுகிறார். ‘ஆனாலும் இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக நால்வர்ண தர்ம அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட அக்கிரமங்களையெல்லாம் மறந்துவிட்டு, கொஞ்சங்கூட மனிதாபிமானம் இல்லாமல் இடஒதுக்கீட்டை அறவே எடுத்துவிட வேண்டுமெனத் தொடர்ந்து ஆதிக்கச் சாதியினர் செய்துவரும் பிரச்சாரம் குறித்து, மக்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், மீண்டும் அடிமைத்தளைக்குள் அழுந்த வேண்டிய வரலாற்றுச் சுழற்சிக்குள் சிக்கிக்கொள்ள நேரும் என்பதை மறந்துவிடக்கூடாது’ என்பதைத்தான், இரா.செழியன், சரியான நேரத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.

இடஒதுக்கீட்டுக் கொள்கையை இந்திய அரசு கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். எல்லாவிதமான சமூக மாற்றங்களும் ரத்தத்தின் மேலும், எலும்புக்கூடுகளின் மேலும்தான், ஐரோப்பிய வரலாற்றில் நடந்தேறியுள்ளன. அதுதான் இங்கேயும் நடந்திருக்கும். ‘‘மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தாவிட்டால் இன்னும் பத்து ஆண்டுகளில் புரட்சி வெடிக்கும்’’ என எச்சரித்தார் வி.பி.சிங். நல்லவேளை அப்படி எதுவும் நடந்துவிடவில்லை.

கட்டுரை ஆசிரியர்: க. பஞ்சாங்கம், பேராசிரியர். பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.

நன்றி : குமுதம் தீராநதி 1-02-2006

பிப்ரவரி 22, 2006

குட்டி ரேவதி-தீராநதி நேர்காணல்

Filed under: பொதுவானவை — ntmani @ 9:12 முப

புதிய உத்வேகத்துடனும் ஒரு இயக்கமாகவும் தமிழில் கவிதை எழுதத் தொடங்கியுள்ள பெண்ணியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் குட்டி ரேவதி. ‘பூனையைப் போல அலையும் வெளிச்சம்!’ ‘முலைகள்’, ‘தனிமையின் ஆயிரம் இறக்கைகள்’ ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ‘பனிக்குடம்’ என்ற பெண்ணியச் சிற்றிதழையும் தொடங்கி நடத்தி வருகிறார். ‘முலைகள்’ தொகுப்பு வெளியான போது, தலைப்புக் காரணமாக மிகுந்த சர்ச்சைக்குள்ளானார். அன்று தொடங்கி சமீபத்திய ‘சண்டக்கோழி’ சர்ச்சை வரை பல சர்ச்சைகளில் இவரது பெயர் அடிபட்டது. ஆனாலும் சர்ச்சைகள் குறித்த கவலை கொள்ளாமல் தொடர்ந்து இயங்கி வரும் குட்டி ரேவதியின் பங்களிப்புகள் தமிழில் பெண்ணிய சிந்தனைகளையும் செயல்பாட்டையும் வளர்த்தெடுப்பதில் முக்கியமானவை.

தீராநதி: உங்களுக்குப் பிடித்த, நீங்கள் அடிக்கடி எடுத்து படிக்கிற கவிஞர்கள் யார்?

குட்டி ரேவதி: பிரமிள், தேவதேவன் இருவரும்தான் எப்போதும் எனக்குப் பிடித்த கவிஞர்கள். பிரமிள் பற்றி நான் மீண்டும் மீண்டும் பேச விரும்புகிறேன். கவிதை ஒரு உறைந்த வடிவம் என்று எனக்குத் தோன்றுகிறது. பிரமிளிடமோ அது அதி உறைந்த வடிவமாக இருக்கிறது. தேவதேவன் மிகவும் அரூபமான ஓர் ஆளுமை. அவர், கவிதைக்குள் இப்போது மிகவும் நெகிழ்வான வடிவத்துக்கு நகர்ந்துவிட்டார். ‘குளித்துக் கரையேறாத கோபியர்கள்’ எழுதிய தேவதேவன் இல்லை, இப்போதிருக்கிற தேவதேவன். மெதுவாக கவிதைக்குள் உரைநடைக்கு அவர் நகர்கிறார். ஆனால் அதற்குள் ஆழமாக கவித்துவம் இருக்கிறது என்பதுதான், அவரது பலம்…………………

தீராநதி : “விமரிசனங்களைப் புறக்கணிக்கிறேன்” என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். விமரிசன இயக்கம் படைப்பியக்கத்துக்கு வலு சேர்க்கக் கூடியது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

குட்டி ரேவதி : விமரிசன இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மொழியில்தான் படைப்பியக்கமும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதில், எனக்கு மறுப்பு இல்லை. தமிழில், பிரமிள் அந்த வகையில் மிகச் சிறப்பாக இயங்கியிருக்கிறார். மிகத் தீவிரத்துடனும் சமூக அக்கறையுடனும் அதனை அவர் செய்திருக்கிறார். அவரைப் போன்ற திறந்த இதயத்துடன் இருக்கும் இன்னொரு விமரிசகரை தமிழில் நான் பார்த்ததில்லை. இன்று தமிழ் விமரிசகர்கள் அவர்களின் சுயமதிப்பீடுகள், குழுக்கள், விருப்பு வெறுப்புகள் சார்ந்துதான் விமரிசனக் கருத்துகளை முன்வைக்கிறார்கள். …………..

தீராநதி:
‘பெண்ணுடலை ஆணுடலுக்கு வழங்குவதற்கான அவஸ்தையே’ உங்களிடம் கவிதையாகியிருக்கிறது. மேலும் ‘இக்கவிதைகள் ஆணிய கருத்தாக்கமான பெண்ணுடல் அருவருப்பானது என்பதையே வலியுறுத்துகின்றன’ என்று மாலதிமைத்ரி உங்கள் கவிதைகளை விமரிசித்துள்ளார். ‘முலைகள்’ கவிதை குறித்த அவரது விமரிசனத்தையும் படித்திருப்பீர்கள் என்று கருதுகிறோம்?

குட்டி ரேவதி: ‘விட்டுவிடுதலையாகி நிற்பதற்கான’ ஒரு ஆரம்பகட்டம்கூட தமிழில் இன்னும் நிகழவில்லையே. ஆண்களுக்கு உடலை வழங்கி, அதிலிருந்து தங்கள் உடலை மீண்டும் மீண்டும் விடுவிப்பதுக்கான எத்தனத்துடன்தான், பெண்கள் இப்போதும் இருக்கிறார்கள். மேலும் மாலதிமைத்ரி பார்ப்பது போல், மிகவும் மேலோட்டமாக கவிதைகளை அணுகுவதுக்கான தளத்திலிருந்து நான் எனது கவிதைகளைப் பார்க்கவில்லை. ‘முலைகள்’ கவிதையில் ஒரு பெண்ணின் முழு உடலையும் நிலப்பரப்பாக நான் மாற்றியிருக்கிறேன். எனது உடலின் வளர்ச்சியை நான் கூர்ந்து அவதானித்திருக்கிறேன். அதனடிப்படையில், உடலை காலமாறுபாட்டுக்கு உட்பட்ட ஒரு நிலப்பரப்பாக ‘முலைகள்’ கவிதையில் பார்த்திருக்கிறேன். எந்தெந்த நிலப்பரப்பில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்திருக்கிறேன் என்பது அந்தக் கவிதையில் இருக்கிறது. அதில் எனது காமத்தை நான் கொண்டாடுகிறேன். அந்த வகையில், என்னைப் பொறுத்தவரைக்கும் முழுமையான நிறைவான ஒரு கவிதை அது.

வேறு விதமாகவும் அந்தக் கவிதையை வாசிக்க முடியும். சாதியை மிக நுட்பமாக அவதானிக்கிற அனேக சந்தர்ப்பங்கள் அந்தக் காலகட்டத்தில் எனக்குக் கிடைத்தது. தலித் பத்திரிகைகள், இயக்கங்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று ஒரு எழுச்சி நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. சாதியம் திணிக்கப்படும் முதல் இடமாக பெண் உடல்தான் இருக்கிறது. அதனை அந்தக் கவிதை பதிவு செய்கிறது. இன்னொன்று, உலகமயமாக்கல் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு உலகத்தில், ‘முலைகள்’ ஒரு உயிர்பூர்வமான விஷயமாக இல்லை. செயற்கையான பொருளால் உருவான ஒன்றாக அது இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் முலைகள் மிகவும் ஆபாசமாக சித்திரிக்கப்படுகிறது. அவர்களைப் பொறுத்தவரைக்கும் உயிர் விருத்திக்கான ஒன்றாகவும் அது இல்லை. வியாபாரத்தை வெற்றிகரமாக்குவதுக்கான சிறந்த ஒரு மூலதனம், அவ்வளவுதான். இதற்கான எதிர்வினையாகவும் அந்தக் கவிதையை பார்க்க முடியும்.

தீராநதி: அந்தக் கவிதை வெளிவந்த புதிதில், ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகத்தான் இப்படி நீங்கள் எழுதுகிறீர்கள் என்று சொல்லப்பட்டது. இன்று வரைக்கும் அந்த விமரிசனம் தொடரவும் செய்கிறது.

குட்டி ரேவதி: அதனை விமரிசனம் என்பதைவிட, தாக்குதல் என்றுதான் நான் பார்க்கிறேன். உயர் சாதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து அந்தக் கவிதை தொகுப்பு வந்திருந்தால், இவ்வளவு எதிர்ப்புகளை அது சந்தித்திருக்காது என்றுதான் கருதுகிறேன். மகாஸ்வேதாதேவி ‘மார்புக் கதைகள்’ (brest stories) எழுதியிருக்கிறார்…………

தீராநதி: நீங்கள் ஒரு சித்த மருத்துவர். சித்தர்களின் ஏடுகளை படிக்கும் வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைத்திருக்கும். அவை உங்கள் படைப்பியக்கத்தை பாதித்திருக்கிறதா?

குட்டி ரேவதி: மிகவும் ஒழுங்கற்ற, ஒப்பனைகள் இல்லாத மொழி சித்தர்களின் மொழி. குறிப்பாக மொழியை அலட்சியம் செய்கிற, அதே நேரத்தில் வேறு வேறு சொற்களைக் கண்டடைகிற தன்மை சித்தர்களிடம் இருக்கிறது. சித்தர்களின் ஏடுகளை, படிக்க கிடைத்த வாய்ப்பை மிகவும் முக்கியமாக நான் கருதுகிறேன். அது அகவயமாக என் சிந்தனையோட்டத்தில் ஊடுருவி, மிகவும் ஆத்திகம் சார்ந்த நுட்பமான ஒரு மாற்றத்தை என்னுள் ஏற்படுத்தி இருக்கிறது. உடலைப் பிரதானப்படுத்துகிற தத்துவம் சித்த தத்துவம். நிலைபேறு அடைவது என்பதை உடல் வழியாகத்தான் அடைய முடியும் என்று அவர்கள் சொல்கிறார்கள். சாதியை மறுக்கிற ஒன்றாகவும் சித்த தத்துவம் இருக்கிறது.

தீராநதி: பெண்ணியம் சார்ந்து தமிழில் நிகழ்ந்துள்ள உரையாடல்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?

குட்டி ரேவதி: பெண்ணியம் குறித்து உலகளவில் நிகழ்ந்திருக்கும் ஆரம்ப காலகட்ட விவாதங்களுக்குள்ளேயே தமிழில் இன்னும் நாம் போகவில்லை என்றுதான் கருதுகிறேன்.

தீராநதி: உலகின் மற்ற பகுதிகளில் நிகழ்ந்துள்ள பெண்ணிய விவாதங்களை அப்படியே தமிழுக்கு எடுத்துக்கொள்ள முடியாது, தமிழுக்கான பெண்ணியம் என்பது, அதிலிருந்து மாறுபட்டது என்ற கருத்தும் இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?

குட்டிரேவதி: நமது நிலவெளிக்கான பெண்ணியம் என்பது நமது பாரம்பரியம் சார்ந்துதான் உதயமாக முடியும் என்பதே என் கருத்து. நமது கோடைகாலம் மிக நீண்டது; நமது உணவு மிகவும் காரசாரமானது; உழைப்பு அதிகமுடையவர்கள் நாம்; மிகவும் உணர்ச்சிபூர்வமான மனிதர்களாகவும் நாம் இருக்கிறோம்; மொழி, நிலப்பரப்பு, வெயில் சார்ந்து நம்மிடையே ஏகப்பட்ட பிரிவுகள்; கண்ணகி, கற்பு போன்ற மொழிவழியாக உள்வாங்கிக் கொண்ட கற்பிதங்கள் நம்மிடம் அதிகம் இருக்கின்றன. அந்தக் கற்பிதங்களைக் கடக்க முடியாத மனத்தடைகளும் சமூகத் தடைகளும் நம்மிடையே அதிகம் இருக்கிறது. ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார்: ”திருமணமான தொடக்க வருடங்களில் உணவில் சரியாக உப்பு போடாததுக்காக என் கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். ஆனால் இப்போது அடிப்பதில்லை. ஏனெனில் நான் சரியாக உப்பு போட கற்றுக் கொண்டுவிட்டேன்.’’ எவ்வளவு பெரிய வலி இந்த கூற்றில் இருக்கிறது. நமது சமூகத்தின் கட்டுமானம் இதில் வெட்டவெளிச்சமாகிறது. நமது பெண்களைப் பொறுத்தவரைக்கும், பெரிய பயணங்களும் அனுபவப் பகிர்வும்தான் பெண்களின் விடுதலையை சாத்தியப்படுத்தும் என்று கருதுகிறேன். ஆனால் பெண்கள் பயணம் செய்வதுக்கான சாத்தியங்கள் இங்கு மிகவும் குறைவு.

சாதியை அடிப்படையாக கொண்ட, இங்கிருக்கும் தீண்டாமையும் வேறு எங்கும் இல்லாத ஒன்று. ஆண் அதிகாரத்துக்கு வசதியாக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்தான் தீண்டாமை. கடந்த ஐந்து வருடங்களில் அரசியல், பத்திரிகை, இலக்கியம் உட்பட எல்லா இடங்களிலும் சாதியம் இன்னும் கூர்மையாகியிருக்கிறது என்றுதான் கருதுகிறேன். பாமா சொல்கிறார்கள்: “தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உடல் மூன்று விதமான வன்முறைக்கு ஆளாகிறது. மேல்சாதி ஆண், பெண் மற்றும் அதே சாதி ஆண் ஆகியோரின் அதிகாரத்துக்கும் வன்முறைக்கும் பெண் உடல் உள்ளாகிறது.’’ மேல் சாதி பெண்கள் கீழ்சாதி பெண்களை எந்தெந்த வகையில் ஒடுக்குகிறார்கள் என்பது இரண்டு பெண்கள் புழங்கும் பரப்பில் வெளிப்படும் ஒன்று. அதனை பாமா மிக நுட்பமாக அவதானித்திருக்கிறார்………

தீராநதி: ஆண்டாளுக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் பிறகு தமிழில் பெண் கவிஞர்களே இல்லை என்ற கவிஞர் விக்கிரமாதித்யனின் பேச்சுக்கு, “அது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு; நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம்” என்று பல பெண் கவிஞர்கள் எதிர்வினை புரிந்திருக்கிறார்கள். உங்கள் தரப்பு என்ன?

குட்டி ரேவதி: சாருநிவேதிதாவும் மற்றும் பலரும்கூட இதுபோல் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எங்களை புறக்கணிப்பதுக்கான, ஒழித்துக் கட்டுவதற்கான ஒரு விஷயம்தான் இந்த ஒப்பு நோக்கல். இதற்குப் பின்னால், ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் சாதியம் சார்ந்த காரணங்களும் மிகப் பலமாக இருக்கிறது என்று கருதுகிறேன். ஒடுக்கப்பட்டவர்களிடம் இருந்து, அதுவும் பெண்களிடம் இருந்து இப்படி வெளிப்படுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக சல்மா, மாலதிமைத்ரி, சுகிர்தராணி மற்றும் நான் எல்லோரது கவிதை உலகமும் மொழியும் வெளிப்பாட்டு முறையும் முற்றிலும் வேறுவேறானவை. அனைவரையும் பொதுமைப்படுத்தி பார்க்க முடியாது. பெண் கவிதைகளை பொதுமைப்படுத்தி பார்ப்பதை நான் அபத்தமாக நினைக்கிறேன்.

ஆண்டாள், காமம் சார்ந்த உறவு விஷயங்களை பக்தியாக பார்த்திருக்கிறார். பக்தி காதலாகி, காமத்தைக் கலந்து வெளிப்படுகிறது. காரைக்கால் அம்மையார், தங்கள் உடலை வருத்தி செய்கிற விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். இருவரிடமும், மொழி, வளமையும் கூர்மையும் கொண்டிருக்கிறது. ஆனால் சமூகத்தை உள்வாங்கிக் கொள்வது என்பது அவர்களிடம் எங்கேயும் நிகழவில்லை. இருவருமே அவர்களது தனிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவதுக்கான ஒன்றாகத்தான் கவிதைகளை பார்த்திருக்கிறார்கள். இன்றைய பெண் கவிஞர்களிடம், மிக நுட்பமான சமூகத்தைக் குறித்த அவதானிப்பு இருக்கிறது. அந்தவகையில்தான், நாங்கள் ஆண்டாளையும் காரைக்கால் அம்மையாரையும் கடந்துவிட்டோம் என்று சொல்கிறோம்…………..

தீராநதி: ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று இலக்கியத்தைப் பிரித்து பார்ப்பதுடன் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

குட்டி ரேவதி: இல்லை. பெண் எழுதினால் பெண் மொழி, ஆண் எழுதினால் ஆண் மொழி என்று பிரிப்பது சரியல்ல. எழுத்தில் மனோபாவம் சார்ந்துதான் ஆண் மொழி, பெண் மொழி என்று இருக்க முடியும். ஒரு ஆணிடம் இருந்து சிறந்த ஒரு பெண் மொழி வெளிப்படலாம். சில ஆண் இயக்குநர்களின் திரைப்படங்களில், அதில் வெளிப்படும் பெண்களின் உலகம், ஆச்சர்யமூட்டும் வகையில் நுட்பமாக இருப்பதை கவனித்திருக்கிறேன். ஒரு பெண்ணால் மட்டும்தான் அது சாத்தியப்படும் என்று தோன்றும். ஆனால் அங்கே அது ஆணால் சாத்தியப்பட்டிருக்கிறது. ஆனால் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று பார்க்க வேண்டிய நிர்பந்தம் ஒரு கட்டத்தில் இருந்தது. இப்போது அதனை கடந்து தமிழ் பெண் கவிஞர்கள் வந்துவிட்டார்கள்……………….

முழுமையான நேர்காணல்- குமுதம்-தீராநதி 01-02-2006

நன்றி: குமுதம் தீராநதி.

பிப்ரவரி 18, 2006

ஒரு நதியோடு

Filed under: பொதுவானவை — ntmani @ 3:14 முப

அவர் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை. ஹரி என்று தொடங்கும் என்று நினைக்கிறேன். அவர் நன்றாக பஜன் பாடக்கூடிய ஒரு சாமியார், நிறைய பக்தர்கள் உள்ளவர் என்பதையும் அறிவேன். அவர் ஹரித்துவாரிலோ, கங்கையிலோ ஆற்றில் குளிக்கும் போது அப்படியே நீரோட்டத்திலேயே சென்றுவிட்டார் என்று படித்தேன். அவரது சீடர்கள் அவர் அதை விரும்பியே, கைகளை அசைத்து விடைபெற்றவாறே ஆற்றோட்டத்தோடு போய்விட்டார் என்று சொன்னபோது நான் அதை பக்தியோடு கைகூப்பிக் கேட்கவில்லை; ஆனால் அதை ஏளனமும் செய்யவில்லை.

எனக்குள் அது எங்கோஓடிக்கொண்டே இருந்தது. அப்படி ஒரு மனிதர் செய்யமுடியாது என்று நான் நினைக்கவில்லை. எனக்கு ஒரு காலத்தில் ஆறும் கடலும் மிகவும் பிடித்தமானதாய் இருந்தது. இப்பவும் கூட. பிடித்தமானது என்றால் Just I love it என்று தோளைக்குலுக்கிக் கொண்டு சொல்லுகிறார்களே அப்படி இல்லை. தெளிவான, சுத்தமான, பொங்கியும் புரண்டும் ஒடோடி வருகிற நதியில் பாய்ந்து என்னை அதன் போக்கிலே உள்ளே இழுத்துச்சென்றுவிட என்னுள்ளும் ஒரு நதி ஓடத்தொடங்கும். தூய்மையான, ஆள்அரவமற்ற நதிகளில் நீந்தியும், மிதந்தும், களிப்புற்றவாறே அப்படியே அதன் போக்கிலேயே கரைந்தும் போய்விட உள்ளே ஒன்று துடிக்கும். கடலைப்பார்த்த மாத்திரத்தில் பாய்ந்து ஓடி தாவி அலைகளில் மோதி சிரித்து சிலிர்த்த காலம் அது. கால் விரல் நுனியில் இருந்து அலையொன்று அடித்து தண்ணீரோடு தண்ணீராய் கலந்துவிட வெடித்துச்சிதறும் சிலிர்ப்பும், மகிழ்வும். நான் ஒரு சார்வாகனாய் இருக்கிறேனோ அல்லது இருந்திருப்பேனோ!

கன்னியாகுமரியில் நள்ளிரவில் கேந்திரத்தின் சுவரேறி குதித்து மணிக்கணக்காய் தனியனாய்க் கடலில், இருளில் அச்சமின்றி நீந்திக் களித்த நினைவுகள் அன்னியமாய்த் தெரியவில்லை இப்போதும். கடல் இருளில் எவ்வளவு அழகாய் இருக்கும் தெரியுமா? காளி அப்படித்தான் இருப்பாள் என்று தோன்றும். விளிம்புகள் மின்னி மறைய அலை ஒரு குழந்தையைப்போல ஓடிவரும். சிலவேளை உன்னை ஆலிங்கணம் செய்வதில் மூச்சை நிறுத்திவிடும். நீயும் கடலும் வெவ்வேறல்ல என்று உன்னை உடலில் இருந்து பிரித்துவிடும். எல்லையற்ற கடலும், உனக்குள்ளே அலைந்துகொண்டிருப்பதும் விடுதலை அடைந்துவிடும். யாருமற்ற தனிமையில் கடலும் நீயும் சிரிக்கும் சிரிப்பொலிகள்தான் இதுவரை அலையாய் தெறிப்பது என்பதை உணர்வாய். மிதக்கத்தொடங்கி விட்டால் உனக்கான இரகசியத் தாலாட்டை காதுகளில் கிசுகிசுக்க நட்சத்திரங்கள் காம்புகளாய் சுரக்கும். கரிப்பது உன் கண்களில் இருந்து வழிவதா, கடல் நீரா என்றெல்லாம் நீ யோசிக்கமாட்டாய்.

துங்காவிலும், நேத்ராவதியிலும் நிகழ்ந்ததும் அப்படித்தான். ஒரு நதி என்பது எப்போதும் ஒவ்வொருவருக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறது; சிலர் அதன் ஓசையைக் கேட்கும் காதுகளை அபூர்வமாகப் பெறுகிறார்கள்; சிலர் அதன் கரையிலேயே எப்போதும் தங்கியிருக்கிறார்கள் சித்தார்த்தாவில் வரும் வசுதேவனைப்போல. ஒரு நதியிடமிருந்து கற்கமுடியாதது என எதுவும் இல்லை என்று தோன்றுகிறது. கேள்வியின் திறனைப்பொருத்தும், உனது சரணடைதலைப்பொருத்தும் உன்னிடம் நதி பேசத்தொடங்குகிறது. அது வார்த்தைகளால் பேசுவதுபோல தொடக்கத்தில் தோன்றினாலும், செவியும், கண்களும் ஒரு கட்டத்தில் அதை செவிமடுக்கப் போதாமையால் உனது உடல் முழுவதும் காதுகளும், கண்களும், வாய்களும் திறக்கின்றன. அதுவும் போதாமல் நீ தவிப்பதை உணரலாம். மெல்ல மெல்ல நதி உன்னைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும். நேத்ராவதியிலும் துங்காவிலும் நீந்துவதற்காக நானும் நந்தனும் முன்பே முடிவு செய்துகொண்டோம். பஸ்ஸை விட்டு இறங்கியதும் நேராக நாங்கள் ஆற்றுக்குச்சென்று நீந்தத் தொடங்கிவிட்டோம். ஆழமும் சுழலும் இருப்பதாய்ச் சொல்லுகிறார்கள். ஒரு நதியிடமிருந்து எதைக்காப்பாற்றிக் கொள்ளப்போகிறார்கள் என்று எனக்குத்தெரியவில்லை. சின்ன வயதில் ஒருமுறை குளத்தில் மூழ்கி கண்களைத்திறந்து பார்த்தால் மஞ்சளாய் புகைபோல ஏதோ அலைகிறது. மூச்சுவிட சிரமமாய் இருந்ததா என நினைவில்லை; ஆனால் உள்ளே வந்து போன ஒரு சோடிக் கால்களைப் பிடித்துக்கொண்டு வெளியில் வந்துவிட்டேன். அம்மாச்சி முதுகில் ஒன்று போட்டார்கள். ஆனால் நேத்ராவதியில் அப்படி இல்லை. தண்ணீர் பளிங்குபோல இருந்தது. வேகமாய் உன்னை அழைத்துக்கொண்டு ஓடிவிடத் தவிக்கும் விளையாட்டுத் தோழனைப்போல இழுத்துக்கொண்டிருக்கிறது. நந்தன் நீந்தியவாறே முகத்தைத் துடைத்துக்கொண்டு இந்தப்பக்கம் வருமாறு மேலே மரக்கிளையில் கட்டியிருந்த சிவப்புக்கொடியைக் காட்டி ஏதோ சொல்கிறான். நான் சிரிக்கிறேன். மிதந்துகொண்டே போகிறேன். அச்சமெதுவும் இல்லாத இடத்தில் இருக்கிறேன். என்னை இழுத்துச்செல்லும் நதியும் நானும் அலைகளில் ஏந்தப்பட்டு மிதக்கிறோம்.

பிறகு துங்காவில் குளிக்க சில நிபந்தனைகளோடு நந்தன் ஒத்துக்கொண்டான். ஆற்றில் நிபந்தனைகளுடன் இறங்குவதைப்போல வதை எதுவுமில்லை. ஆறு நிபந்தனைகளை குறுக்கே நிறுத்துவதில்லை. அதை வெளியே நிறுத்திவிடுகிறது. அதையே கரைகள் என்கிறோம் நாம். நிபந்தனைகளின் ஊடே அது நிபந்தனையற்று ஓடுகிறது. நேத்ராவைவிட துங்கா இன்னும் என்னை அழைத்தது. ஒரு தோழன் என்னைப் பார்ப்பது போல உள்ளே அலையடிக்க அதனால் தளும்பியவாறு என்னை தழுவிக்கொள்கிறது. மீன்கள் என்னை இழுத்துச்செல்வது போல நெருங்கி அழைகின்றன. நதிகளில் இருந்து கரையேறுவது எனக்கெளிதல்ல. மறுபடியும் நிபந்தனைகள் இழுக்கின்றன. விரைவில் ஏறிவிட்டேன்.

அதற்குப்பிறகு நான் வேறு நதியில் எங்கும் இறங்கவில்லை உன்னைக் காணும் வரை.

பிப்ரவரி 16, 2006

மீள்பதிவு: சொல்லும் செயலும்

Filed under: பொதுவானவை — ntmani @ 6:06 முப

என்னால் ஒரு படைப்பாளியினுடைய அரசியல் தளத்தை புறக்கணித்துவிட்டு இலக்கியத் தளத்தைப் பார்க்கமுடியாது. இன்னும் சொல்லப்போனால் படைப்பாளியினுடைய சொந்த வாழ்வினையுப் பற்றிய தகவலகளைக் கூட அறிய ஆர்வமாயிருப்பேன். ஏனெனில் ஒரு மகா கவிஞன் அல்லது மாபெரும் எழுத்தாளன் எனபவன் ஒரு மொத்தமான ஆன்மீக வளர்சியின் ஒரு வழியில் அடைகின்ற நிலை என்கிற கீழை நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. எனக்கு அதனால்தான் பாரதியின் சாதரண தினசரி நடவடிக்கைகளை, உரையாடல்களைக்கூட அறிவதில் மிகுந்த ஆர்வமுண்டு. இது வெறும் ரசிகர் மன்ற மனோபாவம் அல்ல. அதில் இருந்து நான் பெறுகிற உருவம் அவரது இலக்கிய உருவத்துக்கு பொருத்தமாகவே இருக்கவேண்டும். இதை நான் சமய, சமூக ஒழுக்க நியதிகளின் படி மதிப்பிடுவதில்லை என்பது இங்கு மிக முக்கியம். அதனால் தான் பாரதியின் அடிக்கடி இடமெதையும் பாராமல் எச்சிற்துப்பும் பழக்கத்தை ஒரு குறைபாடாக, ஒழுக்கத்தளத்தில் என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தச் செய்தி முக்கியமானது என்று சொல்வேன். அதே சமயம் அரவிந்தரின் மேலும், விவேகானந்தரின் மேலும் அவர் வைத்த விமர்சனங்கள் அவரது இலக்கியப் பிரதிகளை இன்னும் சரியாக புரிந்துகொள்ள உதவுகின்ற அவரது அரசியற் பார்வைகள். அவைகள் தருகின்ற வெளிச்சம் அரவிந்தரின் ஆன்மீக தளத்தையும், பாரதியின் தளத்தையும் வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த உயரம் அவரது இலக்கிய சிகரங்களைச் சரியாக கண்டுணர மிக அவசியமானது. இல்லாவிட்டால் பாரதியை அரவிந்தருக்கு இணையாக வேத, உபநிடத பரிட்சயம் உள்ள வெறும் கவி என்ற கல்கியின் தரப்பு சரியானதாகிவிடும். அப்புறம் சாவித்ரிக்கும், ஞானரதத்துக்கும் பெரிய வேறுபாடில்லாமல் போய்விடும். அது ஞானரதத்தை இழப்பதற்கு ஒப்பானதல்லவா? தி.ஜா தனது முதலிரவன்று தன் மனைவியிடம் தான் ஒரு பாடல் பாடவிரும்புகிறேன் என்று கேட்டு பாடிய செய்தியானது எனக்கு முக்கியமானது. அது எனக்கு அவரது இலக்கிய பிரதியை சரியாக புரிந்துகொள்ள மிகவும் உதவுகிறது. பாண்டிச்சேரியில் தி.நாகராஜன் குடித்துவிட்டு ஒரு அயல்நாட்டுப் பெண்ணிடம் முறைகேடாக நடந்துகொள்ள முயன்றது என்னை பாதித்தது. இதை ஒழுக்கவிதிகள், சமூக நியாயங்களின்படி நான் அணுகவில்லை என்பதை நானறிவேன். அவரது குறத்திமுடுக்கு என்னை மிகவும் பாதித்த அற்புதமான படைப்பு; நேர்மையான படைப்பு.

மேன்மையான இலக்கியம் வாசகனிடம் எதிர்பார்ப்பது மிக நுட்பமான புரிதலை. அவ்விலக்கியம் எல்லோரையும் கவரும் ஒரு கனவுக் கவர்ச்சியை ஒரு பொதுத்தன்மையாகப் பெற்றிருக்கலாம். ஆனால் அது பேரிலக்கியமாக இருப்பது அதனால் அல்ல. அது வாசகன் தன்னை மெல்ல கட்டுடைக்க அனுமதிக்கிறது. அவன் விசாலமடைய அவனுக்கு நுட்பமான உந்துதலையும், எல்லையற்ற வெளியையும் அளிக்கிறது.

http://ntmani.seerakam.com/?p=100

அடுத்த பக்கம் »

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.