Ntmani’s Weblog

ஜூலை 20, 2004

உண்மைகள் கூறி….

Filed under: பொதுவானவை — ntmani @ 11:26 பிப

இந்த விபத்து மிக கொடியது; அதற்கான சகல எதிர்வினைகளும் அதை இன்னும் கொடியதாக்குகின்றன. மக்கள் இதை கொடுமையான விபத்தெனப் பார்க்கின்றனர்; விதியென இதை எதிர்கொண்டு தம்மை ஆற்றிக்கொள்கின்றனர். அரசியல்வாதிகள் தம்மால் இயன்ற அனுதாபத்தையும், உதவியையும் செய்கின்றனர். சில தனிநபர்கள், அமைப்புகள் உதவிபுரிகின்றனர். இவ்வளவுதானா? கிட்டத்தட்ட 90 குழந்தைகளின் கொடுமையான இறப்பு கோருவது இதைத்தானா? இதற்குமுன் திருச்சி கல்யாண மண்டப விபத்து, கும்பகோண மகாமக விபத்து, வாராங்கல் ரயில் விபத்து இப்படி பல விபத்துக்களின் போதும் நாம் இதையேதான் செய்தோம், நினைவிருக்கிறதா?

நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட 300 ரயில்வே பாலங்கள் எந்த நேரத்திலும் விழுகின்ற நிலையில் இருப்பதாய் விசாரனைக் கமிசன் உறுதியாய் சொன்ன போதிலும் அவற்றை சீர் செய்யாமல் எந்நேரமும் வெடிக்கும் ஒரு வெடிகுண்டைப்போல இருக்க அனுமதிக்கும் அரசுகளை என்ன சொல்வது? இவர்கள் எந்தவிதத்தில் தீவிரவாதிகளை விட மாறுபட்டவர்கள்? இவர்கள் இன்னொரு விபத்து நடக்கும் போது தவறாமல் ஓடிவந்து கண்ணீர் உகுப்பார்கள்; பத்திரிக்கைகள் படம் காண்பிக்கும், அறிஞர்கள் காசு திரட்டி தண்ணீர்ப் பந்தல் வைக்கலாமா? கூரைக் கொட்டகை மாற்றலாமா? என்று விவாதிப்பார்கள். கூரைப்பள்ளிகள், வீடுகள் இந்தியாவில் புதியவையல்ல; தீ விபத்தும் புதியதல்ல. அவைகளில் கண்டிப்பதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பள்ளியென்ற பெயரில் மூன்றாம் மாடி (மொட்டைமாடியில்) தப்பிக்கவும் , காப்பாற்றவும் வழியில்லாமல் ஒரு இருட்டறைக்குள் பள்ளி நடத்திட முடியும் என்று நினைக்கிற அராஜகம் கண்டிக்கத்தக்கது; பள்ளியென்றால், யூனிபார்ம், போட்டு டை கட்டி, மம்மி டாடி சொல்லிக்கொடுத்து ரிக்சாவில் அழைத்துப்போய் கொண்டுவரும் அமைப்பென்று புரிந்துகொள்கிற மக்களின் மூடத்தனம் கண்டிக்கத்தக்கது. கல்வியென்றால் முட்டி மோதி ஒடி, காசு கொடுத்து, கைகால் பிடித்து, எப்படியாவது காசு சம்பாதிக்கவும், அதை காட்சிப்பொருளாக்கி கெளரவம் தேடவுமான வழி என்று புரிந்துகொண்டிருக்கிற சமூக விழுமியம் கண்டிக்கத்தக்கது. மாணவர்கள் என்றால் அடிமைகள் என்றும், கல்வியென்பதை இன்னும் அதிகார வசதி என்று புரிந்துகொண்டிருக்கிற கல்விநிறுவன மனப்பான்மை கண்டிக்கத்த்க்கது. மக்கள் தமது ஆளுதலுக்கும், அச்சுறுத்தலுக்கும், அனுதாபத்துக்கும், தாம் வீசியெறிகிற இலவசங்களுக்குமான பாத்திரங்கள் என்று கருதுகிற, இப்படி செய்வதையே ஆட்சி புரிவது என்று நம்புகிற அரசியல்வாதிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கண்டிக்கத்த்க்கவர்கள், சபிக்கத்தக்கவர்கள் ஒருசாரார். அவர்களாலேயே இத்தனை சீரழிவுகளும், ஊழல்களும், அராஜகங்களும், மூடத்தனங்களும் நிலவுகின்றன. ‘உலகு என்பது பெரியோர் மாட்டே’ என்று படித்திருக்கிறேன். இப்படிப்பட்ட எந்த விழுமியங்களையும், கற்பிதங்களையும், ஒழுக்கங்களையும், நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் சிறிதும் உடைக்காமலும், அவற்றின் அரிதாரத்தை கலைக்காமலும், அவற்றின் அநாகரீகங்களை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு அவர்களது உண்மையான இடத்தை, கல்வியை, உரிமையை, பொறுப்பை சொல்லாமலும், வெளிப்படுத்தாமலும் இருக்கிற அறிஞர்கள், சான்றோர்கள், கற்றோர்கள் இவர்கள்தான் இந்த பெருங்கண்டனத்துக்கு உரியவர்கள்.

விடுதலை என்பது எவருடைய கருணையிலும் வாழ்வதல்ல; எவருடைய அனுதாபத்திலும் உழல்வதல்ல. விடுதலை என்பதன் விளக்கமாக நான் நினைப்பது ஒருவர் தம்மைப்பற்றிய சரியான புரிதலைப் பெறும்போது கண்டுகொள்கிற பிறப்புரிமை என்பதுதான். அது அரசியல் விடுதலையாகட்டும், பொருளாதார விடுதலையாகட்டும், ஆன்மீ
விடுதலையாகட்டும் விடுதலைக்கான் விளக்கம் அது என்றுதான் நான் கருதுகிறேன். எனவே விடுதலை என்பது எல்லாருக்குமானது; அல்லது அதை எல்லோருக்குமானதாக ஆக்க அறிஞர்கள் உழைக்க வேண்டும். பாரதி அதன் பொருட்டே பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை… என்றான். இந்த விடுதலைக்கான வழியாக தேசியக்கல்வியொன்றே வழியெனச் சொன்னான். வெறும் ஆங்கிலேயே ஆதிக்க எதிர்ப்பாக அவனது விடுதலைக்குரலை விளங்கிக் கொண்டோம். வெள்ளையரசில் இருந்து பெறும் விடுதலை வெறும் ஆதிக்கமாற்றம் மட்டுமே என்பதைக் கூட அறியாதவனா அவன்? ஆனால் அப்படி அவனைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நாம் மூடர்களாய் இருந்தோம். எனவே நமது அரசியல், பொருளாதாரம், ஆன்மிகம் என்று சொல்லிக்கொள்கிற எதுவும் மக்களை விடுவிக்கிற வகையாய் இல்லை. ஏனெனில் அந்தப் பொறுப்புகளில் இருப்பவர்கள், அதற்கு அருகதையாக தம்மைச் சொல்லிக்கொள்கிறவர்கள் விடுதலை அடைந்தவர்களாய் இல்லை. சான்றோர்கள் அற்ற நாடாய்ப் போய்விட்டது இது. மக்களையோ, தம்மையோ கருத்தில் கொள்ளாமல் ஒரு நாளைக்கு முந்நூறு பக்கங்கள எழுதுவதால் தம்மை எழுத்தாளர்களாய் சொல்லிக்கொள்ளும் படைப்பாளிகள், ஹாலிவுட் சினிமா அத்தனையையும் அப்படியே சுட்டு தமிழில் (?) தந்து தன்னை அதிமேதாவிகளாய்க் காட்டிக்கொள்ளும் இயக்குனர் இரத்தினங்கள், சாதிமுதல் சகலவிதமான அழுக்குகளையும் பாதுகாக்கும் சங்கரமடங்கள், ஜனநாயகம், புரட்சி என்று காட்டி காசு பொறுக்கும் அரசியல்வாதிகள், வெறும் அடியாட்களாயும், அடிமைகளாயும் குறுகிப்போன கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், இவர்களத்தனை பேரையும் படங்காட்டி ஊரை ஏமாற்றும் ஊடகங்கள். இவர்களில் எவருடைய இடத்தையாவது எப்படியாவது தமது பிள்ளை எட்டிப்பிடித்துவிடாதா என ஏங்கும் மத்தியதர வர்க்கம். அதற்காக எப்படியாவது ஒரு பள்ளி, ஏதாவது ஒரு பாடம்.  இவர்களிடமிருந்து உதிரும் கருணையையும், இலவசங்களையும் எட்டிப்பிடிக்கவென்றே நாம் கட்டிக் காப்பாற்றி வரும் அடித்தட்டு மக்கள். இந்த மதிப்பீடுகள் எதையும் கேள்வி கேட்காத, இவை உறையும் பீடங்களை உடைக்காமல், இவற்றை வழிபடும் பெரியோர்கள்….

இதோ இன்னொரு விபத்து, இன்னொரு கருணை வெள்ளம், கண்ணீர்க் காட்சிகள், அனுதாப ஓலங்கள், ஒலைகொட்டகை முதல், அடுப்பு நெருப்புவரை குற்றம் சொல்லி திசை திருப்பும் விவாதங்கள்… இதற்கு நடுவிலோ, இவை ஓய்ந்தபின்னோ உண்மையான கரிசனையோடு முன்னொக்கோடு மக்களுக்கு அவர்களின் மதிப்பீடுகளில் ஏற்பட்டிருக்கிற நாசத்தை, அவர்களது உரிமையில் ஏற்ப்பட்டிருக்கிற ஊனத்தை சொல்லுவார்கள் என்று இதுகாறும் எதிர்பார்த்தேன்.
 
* * *
சில நாட்களுக்கு முன் நானும் எனது ஜெர்மானிய நண்பரும் அடுத்த மாதம் வரப்போகும் அவருடைய விருந்தினருக்கு ஒரு அறை பதிவு செய்யச் சென்றிருந்தோம். இதைச் செய்ய ஏகப்பட்ட கடிதங்கள், நடுவில் இதைக் கவனித்துக் கொள்ளும் அலுவலரின் விடுப்புகள். கடிதத்தை யாரிடம் கொடுப்பது என்ற குழப்பங்கள் (இதை வழமையாக செய்து வரும் அலுவலகம் தான் அது) சம்பந்தமில்லாமல் நண்பருக்கே அவருக்கு புரியாத மொழியில் திட்டு, இதையெல்லாம் கண்டு ஜெர்மன் நன்பருக்கு வியப்பு. இத்தனைக்கும் பிறகு கடைசியில் விருந்தினர் அறையை பதிவு செய்யும் அலுவலர் ஒருவருக்கு 5 நாள்தான் அறை ஒதுக்க முடியும் என்றார். ஆனால் பின் அவரே நான் அதைப் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சொல்லிவிட்டார். நண்பர் என்னிடம் கேட்டார், “ஏன் ஒருவர் தமது விருந்தினரைத் தங்க வைக்கவென தீர்மானமான ஒழுங்கு படுத்தபட்ட வழிமுறைகள், விதிகள், வசதிகள் இல்லையா? என்னிடம் யாரும் அப்படிப்பட்ட எந்த விதிகளையும் சொல்லவோ, எனக்கு என்னென்ன உரிமைகள் பொறுப்புகள
் இருக்கின்றன என்று சொல்லவோ இல்லையே என்றார்”. நான் அவரிடம் சொன்னேன். இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டிலேலேயே ஓரே விதிதான் இருக்கிறது. அது மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளையும், பொறுப்புகளையும் சொல்லாதவரை, அவர்களை எப்போதும், குழப்பத்திலும், சார்ந்திருப்பதிலும் வைத்திருக்கும் வரை நீ அவர்களை அதிகாரம் செய்யலாம், குற்ற உணர்வில் வைக்கலாம், கருணை காட்டலாம், காசு சம்பாதிக்கலாம் என்ற விதிதான் அது. இந்த நாட்டை சட்டம் ஆளுகிறது என்று சொல்வதை விட இந்த ஒரு விதியே ஆளுகிறது என்று சொல்லலாம் என்றேன்.

உற்றவர் நாட்டவர் ஊரார் – இவர்க்கு
உண்மைகள் கூறி இனியன செய்தல்
நற்றவம் ஆவது கண்டோம் – இதில்
நல்ல பெருந்தவம் யாதொன்றும் இல்லை.

***
அருளுடைய பதிவுக்கும், சுந்தருடைய பதிவுக்குமான எனது பின்னூட்டங்கள்.

5 பின்னூட்டங்கள் »

  1. தீப்பிடித்த அன்றும் என் அலுவலக நண்பர்கள் அப்படித்தான் கேட்டார்கள் “ஏன், பள்ளிக் கட்டிடத்துக்கு விதிமுறைகள் ஏதும் இல்லையா?” என்று. விதிமுறைகளுக்கு எம்மூரில் பஞ்சமில்லை, அவை எங்கே, எப்படி இருக்கின்றன என்பதுதான் தெரியவில்லை என்றேன். நமக்குத் தெரியாத வரைக்கும் அரச எந்திரம் அந்த விதிமுறைகளை உயிருடனோ அல்லது பிணமாகவோ வைத்திருக்கலாம், உருமாற்றிக் கொள்ளலாம், யாருக்கும் தெரியாது. இது ஒரு நிழல் ராஜாங்கம். திருடர்களின் அரசாங்கம். சட்டங்களை/விதிமுறைகளை மக்களுக்குக் கொண்டு வந்து விளக்கிச் சொல்லும் வழிமுறைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் என்ற உனது இந்தக் கருத்தை ஒட்டித் தன்னார்வ நிறுவனங்கள் உழைத்தால் தெளிந்த சமுதாயத்தை உருவாக்கலாம். “உண்மைகள் கூறி” என்ற வார்த்தைகளை மிக ஆழமாகப் பார்த்து விளக்கியிருக்கிறாய். மிக்க நன்றி.

    பின்னூட்டம் by சுந்தரவடிவேல் — ஜூலை 21, 2004 @ 9:59 முப | மறுமொழி

  2. நன்றிகள் தங்கமணி இப்பதிவிற்கு. இதைதான் நாம் இந்த சம்பவத்தின் மூலம் கொள்ள வேண்டும். பாரதியின் வரிகள் சரியான நேரத்தில், விரிவான பார்வையில் சுட்டியதற்கு நன்றிகள்.

    பின்னூட்டம் by Balaji-Paari — ஜூலை 21, 2004 @ 11:34 முப | மறுமொழி

  3. This post has been removed by the author.

    பின்னூட்டம் by karthikramas — ஜூலை 22, 2004 @ 12:59 பிப | மறுமொழி

  4. தங்கமணி, விடுதலையை நாம் புரிந்து கொண்டும் பேசுவதையும் விட, அனைவருக்கும் சென்று சேர்வது அவசியம். இந்த இடத்தில்தான் நமது சாபக்கேடு உள்ளது. உதாரணமாய், அறிவியலின் பயனும் அனைவருக்கும் சென்று சேராததைச் சொல்லலாம். டீவீ வந்து எத்தனை பத்தாண்டுகள் ஆகினாலும் கஞ்சிக்கில்லாதவனுக்கு டீவீ கிடையாது , அதனால் வரும் அறிவும் கிடையாது. இப்போது அது கணினியிலும் அதே நிலைமை உள்ளது.குடியானவனைச் சென்று சேரும் எந்த வழிமுறைக்கும் காது கொடுக்க மேல் வர்க்கத்துக்கு நேரமில்லை. இன்னும் எத்தனையோ உதாரணங்களும் உண்டு. இந்த கொண்டுசேர்க்கும் வேலையில் உள்ளவர்கள்,ஊடகங்கள் ஆகியவை நேர்மையைத் தொடர்தல் இதில் தலையாய அவசியம். நாம் இன்னமும் 50 ஆண்டுகளுக்கு, பத்திரிகைகளையோ , சமூக அமைப்பையோ சாடிக்கொண்டேதான் இருப்போம். அந்தப்பக்கம் சாகிறவன் செத்துக் கொண்டேதான் இருப்பான். இதை அவநம்பிக்கையால் சொல்லவில்லை, நேர்மையின்மை தலைவிரித்தடுவதால் சொல்கிறேன். முதலாளித்துவப் போக்கு மறையாமல், நடுனிலைமையும் நேர்மையும் சமூகத்தில் வேறூன்றா. எனினும் குறைந்தது நாம் சாடிக்கொண்டாவது இருப்போம். யோசனைகள் வரும்போது அள்ளித்தெளிப்போம் அனைவருக்கும்!!

    பின்னூட்டம் by karthikramas — ஜூலை 22, 2004 @ 1:03 பிப | மறுமொழி

  5. தங்கமணி அண்ணா உங்களுடைய இந்தப் பதிவை தற்ஸ்ரமிழ் இல் பார்த்தேன் நல்லதொரு பதிவு கூடவே உங்களைப் பற்றியும் மேலதிகமாக அறிந்து கொண்டேன்

    பின்னூட்டம் by ஈழநாதன் — ஜூலை 28, 2004 @ 3:10 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.